தபால் நிலையங்களில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கலாம்..!
வங்கி மற்றும் தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புடன் இருக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. இந்நிலையில் தபால் அலுவலகத்தில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகளை பொதுமக்கள் திறக்க ஏதுவாக தபால் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டத்தின் விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது.
ஏப்ரல் 9, 2021 தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, தபால் அலுவலக ஜீரோ பேலன்ஸ் கணக்கினை தொடங்க, ஏதேனும் ஒரு அரசாங்க நலத் திட்டங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வயது வந்தவர் யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
அரசாங்க நலத் திட்டங்களுக்காக பதிவு செய்யப்பட்ட மைனருக்காக அவரது பாதுகாவலர் திறக்கலாம். மேற்கண்ட நபர்கள் தங்கள் முதன்மை சேமிப்புக் கணக்காக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இருப்பினும், ஒரே ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். இந்த கணக்கில் அரசாங்க நலத் திட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் மற்றவர்களாலும் இயல்பாக டெபாசிட் செய்ய முடியும்.
ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை அல்லது எல்பிஜி மானியம் போன்ற அரசாங்க நன்மைகளைப் பெறுபவர்கள், உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருக்க விரும்ப வில்லை என்றால், நீங்கள் தபால் அலுவலகத்தில் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் தொடங்கலாம்.
இந்த ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை தொடங்க, தேவையான கேஓய்சி ஆவணங் கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் உங்கள் அருகிலுள்ள தபால் அலுவலக கிளைக்குச் சென்று, அங்கு வழங்கப்படும் இத்திட்டத்திற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இதன் பிறகு 2-3 வேலை நாட்களில் உங்களது ஜீரோ பேலன்ஸ் கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும். தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளை ஆன்லைனிலும் தொடங்கிக் கொள்ளும் வசதி உண்டு.
உங்கள் அனைத்து KYC ஆவணங்களையும் தபால் அலுவலகம் சரி பார்த்த பிறகு, உங்களுக்கு ஒரு காசோலை புத்தகம், ஏடிஎம் அட்டை, வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைக்கான தகவல்கள் போன்றவற்றை அளிக்கும். தற்போது வரை இத்திட்டத்தில் ஆண்டுக்கு 4% வட்டி கிடைக்கிறது. மேலும் ஜன-தன் யோஜனா திட்டம் அல்லது அடிப்படை சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்கின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு பூஜ்ஜிய இருப்பு கணக்குகளை (BSBDA) திறக்க அனுமதித்துள்ளது.
தற்போது தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தேவையாக உள்ளது. ஆனால் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கின் கீழ் தொடங்கப்படும் கணக்குகளுக்கு, குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. மேலும் இந்த கணக்குகளுக்கு அரசாங்கமே இறையாண்மை உத்தரவாதங்களை வழங்குகிறது, அதாவது தபால் அலுவலகம் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்தை திருப்பித் தரத் தவறினால், கணக்கு வைத்திருப்பவர்களின் இழப்புகளை அரசாங்கமே ஈடுகட்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த திட்டத்தில் ஒரு சிறப்பம்சமாக, ஒருவருக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.5,000த்திலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் இனி வங்கிகளுடன் போட்டியிட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.