பதிவோ 23.6 லட்சம், செயல்பாடோ 14.8 லட்சம் பெருகிக் குறையும் நிறுவனங்கள்!
கரோனாவிலிருந்து உலகம் மீண்டுள்ள நிலையில் பொருளாதாரச் செயல்பாடுகள் அதிகரித்து இருக்கின்றன . இவ்வாண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையில் இந்தியாவில் 90,051 நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப் பட்டுள்ளன . கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் உச்சபட்ச எண்ணிக்கை ஆகும். 2021 -ல் 78,533 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன .
பல்வேறு துறைகளில் புதிதாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகுவதால் , பதிவு செய்யப் படும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் , ஏற்கனவே நிறுவனம் நடத்திவருபவர்கள் , ஜிஎஸ்டி நடைமுறையின் பொருட்டு , பெயரளவில் புதிய நிறுவனங்களை தொடங்குவதாகவும் கூறப்படுகிறது .
நடப்பு ஆண்டில் நிறுவனங்களின் பதிவு மட்டும் அதிகரிக்கவில்லை, நிறுவனங்களின் மூடலும் அதிகரித்து இருக்கிறது . 2022 -ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 59,560 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தின் நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இது 522 சதவீதம் அதிகம் ஆகும் . சென்ற ஆண்டு இந்த காலகட்டத்தில் 9,563 நிறுவனங்கள் மூடப்பட்டன .
2022 ஜூன் நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 23.6 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன . ஆனால், இவற்றில் 14.8 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன .