இந்திய திருமண சந்தையின் தற்போதைய மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ. 3,50,000 கோடி. கடந்த 2010ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த இதன் தற்போதைய வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் என்கிறது புள்ளி விவரங்கள். வெவ்வேறு விதமான வர்த்தகம் கொண்ட இந்த சந்தை அனைத்து தட்டு மக்களின் பணப்புழக்கத்தை உள்ளடக்கியது.
திருமணங்களுக்கான வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ஆபரணங்களுக்கான ஜூவல்லரி வர்த்தகம் ஒருபுறம் என்றால், பிளாஸ்டிக், உலோகக் கலவைகள், நைலான் போன்ற பேன்ஸி ஸ்டோர் வர்த்தகம் மறுபுறம். 1.5 லட்சம் கோடிக்கு மேல் இதில் புழங்குகிறது. மணப்பெண்ணின் அலங்கார போலி நகைகளின் ஒருநாள் வாடகை பல ஆயிரங்கள் என்றால் வர்த்தக தன்மையை யூகித்து கொள்ளுங்கள்.
ஜரிகை வேட்டி, பூணம் சாரியில் தொடங்கி பட்டுபுடவை, பட்டுவேட்டி, கோட் சூட், பார்ட்டி வேர், கவுன், குர்தா, கல் பதித்த ஆடைகள் என ஜவுளி வர்த்தகம் திருமண சந்தையில் அமர்க்களப்படுகிறது. ரூ.50 உள்ளாடை முதல் ரூ.5 லட்சம் அலங்கார ஆடைகள் வர்த்தகம் மிகச்சாதாரணம். திருமணச் சந்தையில் ஜவுளி வர்த்தகம் சுமார் 15 ஆயிரம் கோடி.
மணமக்கள் அழகாக முன்நிறுத்தும் அழகுநிலையங்களின் வர்த்தகம் சக்கைபோடு போடுகிறது. பல்வேறு மேக்கப் சாதனங்கள் புதிதுபுதிதாக சந்தைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு நாள் மணப்பெண் அலங்காரம் பல ஆயிரங்களில் துவங்கி பல லட்சங்களை கடந்துவிட்டது. மணமகன் அலங்காரங்கள் இதற்கு சற்றும் சளைத்ததல்ல. கார்ப்ரேட் நிறுவனங்கள் முதல் உள்ளூர் அம்மணிகள் வரை கல்லா கட்டுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த வர்த்தகம் ரூ.3000 கோடியில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
உணவு விருந்துகள் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை திருமணச் சந்தையில் களைகட்டுகிறது. இதில் உணவுதானியம், காய்கறிகள், பழங்கள், பால், தயிர் ஐஸ்கிரீம், பாப்கான், பீடா வரை வர்த்தகம் நடக்கிறது. மதுபானங்கள் கூட விதிவிலக்கு அல்ல.
மேடை, மணப்பெண், மண்டபம் அலங்காரம் துவங்கி பூங்கொத்து வரை பூக்களுக்கான வர்த்தகம் பல நூறு கோடிகள். திருமண சந்தையில் சீதனமாக இடம்பெறும் இருசக்கரம் மற்றும் கார்கள் பங்களிப்பு வாகன சந்தைகளில் ரூ 25 ஆயிரம் கோடிகளுக்கு மேல்.
திருமண அழைப்பிதழ்கள், பேப்பர் கப்புகள், தட்டுகள், என தொடங்கி வாழ்த்து, வரவேற்பு போஸ்டர்கள், வினையல் தட்டிகள், பத்திரிக்கை விளம்பரங்கள் என விரிகிறது காகிதம், விளம்பரம் மற்றும் அச்சு வர்த்தக சந்தைகள். இன்டோர், அவுட்டோர் சூட்டிங் என போட்டோகிராபி, வீடியோ தொழில் பல ஆயிரம் கோடி புழக்கத்தோடு சினிமாத்துறையை தொட்டு பார்க்கிறது.
திருமண இடத்தேவைக்கான வர்த்தகத்தில் பெரிய குளிர்சாதன மண்டபங்கள் தொடங்கி சாலையோரத்து கோயில்கள் வரை கல்லா கட்டுகின்றன. தற்போதைய வர்த்தகம் ரூ.15,000 கோடிக்கு மேல். கடந்த 2010ம் ஆண்டு ரூ.5,000 கோடியாக இருந்தது இந்த வர்த்தகம்.
இந்திய தேன்நிலவு சுற்றுலா சந்தை கடந்த 2020ம் ஆண்டு 458 பில்லியன் இந்திய ரூபாயாக இருந்தது. இத்துறை அபார வளர்ச்சி கண்டு வருகிறது. யானை, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகள் கூட மணமக்கள் வரவேற்பு, திருமண ஊர்வலம் என்று திருமண சந்தையில் வலம் வருகின்றன.. திருமணச் சந்தையில் விதவிதமான வர்த்தகங்கள் சிதறி கிடக்கின்றன. இந்திய இளம் ராஜா-ராணிகளுக்கான திருமணச் சந்தை, தேசத்தின் குறுக்கும் நெடுக்குமான பணப்புழக்கத்தின் அச்சானி.