இல்லத்தரசிகள் எளிய வருமானம் பெற சில டிப்ஸ்..!
- உங்கள் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அதிகம் கிடைக்கிறதோ அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி காயவைத்து காய்கறி வற்றல் தயாரிக்கலாம். பாலித்தீன் பைகளில் அடைத்து அருகில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும். கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டக்காய், பாகற்காய், மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் மவுசு உண்டு.
- சுயஉதவிக் குழு பெண்கள் இணைந்து கிராமத்தில் இருக்கும் புளிய மரங்களை ஏலத்துக்கு எடுக்கலாம். புளியம் பழங்களை உதிர்த்து, புளியை இடித்துப் பதப்படுத்தி பேக் செய்து மொத்த வியாபரிகளிடம் விற்கலாம்.
- நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீஸன் என்றால் அதை வாங்கி சுத்தப்படுத்தி, தேனில் ஊற வைத்து, நிழலில் காய வையுங்கள். பிறகு, 50 கிராம், 100 கிராம் என பாலித்தீன் பைகளில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், டவுனிலுள்ள மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். தொடர்ந்து செய்யும் போது ரெகுலர் கஸ்டமர்கள் கிடைப்பார்கள்.
- உங்கள் வீட்டு புறக்கடையில் அதிக இடமிருந்தால் நாட்டுக்கோழி வளர்க்கலாம். உள்ளுர் சந்தையிலேயே நல்ல வரவேற்பு இருக்கும். நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகளுக்கு எப்போதுமே கிராக்கி தான்.
- காளான் வளர்ப்பு பெரிய பிசினஸாக வளர்ந்து வருகிறது. வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே பயிர் செய்து, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு ரெகுலராக சப்ளை செய்தாலே மாதாந்திர செலவுக்கு கைகொடுக்கும்.
பெண்களுக்கான மதிப்பான தொழில்:
ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைக்கும் திறன், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனையும் யோசித்து அவற்றைத் தயார் செய்வது போன்ற திறன்களை நம் பெண்கள் தனியே கற்க தேவையில்லை. ஏனென்றால் நம் வீடுகளில் கல்யாணம், பண்டிகை காலங்களில் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள் பெண்கள்.
நிகழ்ச்சி மேலாண்மையின் முறைமைகளை மட்டும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டால் போதும், இத்தொழிலில் ஈடுபடுவோரிடம் முதலில் உதவியாளராக சேர்ந்து பயிற்சி பெறலாம். அல்லது சின்னச் சின்ன கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள் என பழகிக் கொண்டு, சிறிய மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வாய்ப்பு தேடலாம்.