ஐடி நிறுவனங்களுக்கு வரும் புதிய ஆபத்து
இந்தியாவின் சேவைத் துறை ஏற்றுமதிகளில் பிரதான இடத்தை, தகவல் தொழில்நுட்பத்துறை பெற்றுள்ளது. இந்த வகையில், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா, விப்ரோ , இன்போசிஸ் உட்பட பல நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து பெரும் அளவில் சாப்ட்வேர் உட்பட தகவல் தொழில்நுட்ப சேவைகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றன.
அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு, பொருளாதார மந்தம், செலவினங்களை சுருக்கு வது உட்பட பல காரணங்களால், பல ஐரோப்பிய நாடுகள் தகவல் தொழில்நுட்பத்துக்கான தங்கள் செலவுகளை சுருக்கத் தொடங்கியுள்ளன.
ஐரோப்பா மட்டுமின்றி, பல அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் தகவல் தொழில்நுட்ப செலவினங்களைக் குறைக்கும் முடிவுக்கு வந்துள்ளன, காரணம், அமெரிக்காவின் மித மிஞ்சிய பணவீக்கம், பெடரல் வங்கியின் வட்டி வீதம் உயர்வு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு உட்பட பல காரணங்களால், தகவல் தொழில்நுட்ப ஆர்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட செலவி னங்களில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தக் காரணங்களால், ஐரோப்பாவில் உள்ள நிறுவனங்களுடன், அமெரிக்காவின் சில நிறுவனங்களும் இணைந்து, இந்தியாவுக்கான தங்கள் தகவல் தொழில்நுட்ப ஆர்டர்களை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளன. இதனால், -இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திடீர் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கின்றன.