எந்த வடிவத்தில் இருந்தாலும் அப்பளங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது
“வட்ட வடிவ அப்பளங்களுக்கு ஜிஎஸ்டியில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் சதுர வடிவ அப்பளங்களுக்கு வரி விலக்கு இல்லை. யாராவது நல்ல பட்டய கணக்காளர் இதில் உள்ள தர்க்கத்தைப் புரிய வைத்தால் நல்லது என்று ஆர்பிஜி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவருடைய இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இந்தத் தகவலை யார் தெரிவித்தது என்று கேட்டதற்கு நண்பர் ஒருவர் கூறியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு மத்திய மறைமுக வரிகள் வாரியம் ஓர் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “ஜிஎஸ்.டி சுற்றறிக்கை எண்2/2017 சிடி(ஆர்) என்ற வழிகாட்டுதல் வரைவில் எண் 96ல் அப்பளங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் வடிவங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அப்பளங்கள் எந்த வடிவத்தில் எந்த பெயரில் இருந்தாலும் அவற்றுக்கு ஜிஎஸ்.டி இல்லை” என குறிப்பிட்டுள்ளது.