பழைய ஃபிளாட் வாங்கறீங்களா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வளர்ச்சியடைந்த நகரங்களில் புது அடுக்குமாடி வீடுகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால், பலரும் சுமார் 10 முதல் 15 ஆண்டுகளின் பழைய அடுக்குமாடி வீடுகளை வாங்கி வருகிறார்கள். இந்த பிளாட்டுகள் பட்ஜெட்டுக்குள் இருப்பதுடன், கூடுதல் வசதிகளுடன் உள்ளன.
புது பிளாட் சதுர அடி ரூ.6,000 எனில், சுமார் 15 ஆண்டுகள் பழைய ஃபிளாட்டுகளின் விலை கிட்டத்தட்ட ரூ.4,000-ஆக இருக்கிறது. 20, 25 ஆண்டு பழைய ஃபிளாட்டுகளுக்கும் வீட்டுக்கடன் தாராளமாகக் கிடைக்கிறது என்பதால், பலரும் வாங்கி வருகிறார்கள். புது ஃபிளாட்டை போல் மாதக் கணக்கில் ஏன் ஆண்டுக் கணக்கில் குடியேற காத்திருக்கத் தேவையில்லை; பழைய ஃபிளாட் என்கிறபோது, உடனடியாகக் குடியேற முடியும். பழைய ஃபிளாட் வாங்கும்போது எந்த ஆவணங்களை சொத்தை விற்பவரிடமிருந்து கேட்டு வாங்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
வில்லங்கச் சான்று : சொத்து மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதையும், சொத்து ஆவணம் தெளிவாகவும் விற்கக் கூடியதாகவும் இருப்பதையும், அதன் ஒரு பகுதி வேறு யாருக்கும் விற்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் ஆவணம்தான் வில்லங்கச் சான்றிதழ் ஆகும். இந்த ஆவணம், சொத்து தொடர்பான சட்டச் சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் புகார்கள், சிக்கல்கள் குறித்தும் தெரிவிக்கும். மேலும், நீங்கள் வாங்கப் போகும் ஃபிளாட் தொடர்பான அனைத்து முந்தைய பரிவர்த்தனைகளும் இந்தச் சான்றிதழில் காட்டப்படும். குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் தொடங்கி 30 ஆண்டுகள் வரைக்கும் வில்லங்கச் சான்றிதழ் இருப்பது நல்லது. சொத்து வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்தால், அந்த விவரம் வில்லங்கச் சான்றிதழில் வரும்.
தடையில்லாச் சான்றிதழ் : தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ்களை சரிபார்க்கும் முன், நீங்கள் வாங்கும் பழைய ஃபிளாட்டுக்கு முன்பணம் எதுவும் தர வேண்டாம். குடிநீர் வடிகால் வாரியம், மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் போன்ற வற்றால் கட்டடம் கட்டத் தடை இல்லை எனச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வாங்கு பவருக்கு என்.ஓ.சி-களை வழங் காமல் ஒரு விற்பனையாளர் ஒரு சொத்தை சட்டபூர்வமாக விற்க முடியாது. எனவே, விற்பனையாளரால் ஃபிளாட்டுக் கான என்.ஓ.சியைப் பெற்று உங்களுக்குத் தர முடியாவிட்டால், அந்தச் சொத்தை வாங் காமல் இருப்பது முக்கியம்.
சொத்து வரி ரசீது : மறுவிற்பனை ஃபிளாட் வாங்கும்முன் அனைத்து சமீபத்திய சொத்து வரி (Property Tax) ரசீதுகளையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. இதன்மூலம், தற்போதைய உரிமையாளர் சரியான நேரத்தில் வரி செலுத்தியிருப்பதையும், அவர் எந்தவிதமான மோசடியிலும் ஈடுபடவில்லை என்பதையும் உறுதிசெய்துகொள்ள முடியும்.
குடிநீர், மின்சாரக் கட்டண ரசீது : முந்தைய மாதம் வரைக்கும் குடிநீர், மின்சாரக் கட்டணம் போன்றவை கட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். கடைசியாகப் பணம் கட்டிய ரசீதை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்த ரசீதுகள் உங்களுக்கு வீட்டை விற்பவரின் பெயரில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முந்தைய உரிமையாளரின் பெயரில் இருந்தால், அவர் கையெழுத்து போட்டால்தான் பெயர் மாற்றம் செய்ய முடியும். அந்த வேலையை நீங்கள் தற்போதைய உரிமையாளரின் மூலமே மேற்கொள்வது நல்லது. நீங்கள் அந்த வேலையைச் செய்யும் போது முந்தைய உரிமையாளர் பணம் கேட்டு வாய்ப்பு உண்டு, அரசு அதிகாரிகள் சிக்கல் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே, பத்திரப் பதிவு செய்வதற்கு முன் இந்த வேலைகளைச் செய்துவிடுவது நல்லது. தற்போதைய உரிமையாளரின் பெயரில் இந்த ரசீதுகள் இருக்கும்பட்சத்தில் பத்திரப் பதிவு முடிந்ததும் உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
கட்டட அனுமதி சான்றிதழ் : சட்ட விரோதமான கட்டுமானம் எப்போது வேண்டுமானாலும் அதன் உரிமையாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்டத்தைப் பின்பற்றிதான் ஃபிளாட் கட்டப் பட்டதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.இந்தச் சான்றிதழ் ஃபிளாட், அதன் தள அமைப்பு, பயன்பாட்டுகள் மற்றும் பிற உப கரணங்களின் வரைபடத்தைப் பிரதிபலிக்கும். ஏதேனும் அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அந்த ஃபிளாட் எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படக்கூடும்.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் : கட்டுமான வேலைகள் நிறைவு பெற்று விட்டன. குடியிருக்க ஏற்றது என்பதற்கான சான்றிதழ்தான், நிறைவுச் சான்றிதழ்- (completion certificate) ஆகும். இதை உள்ளாட்சி அமைப்பு, ஒரு கட்டுமானத் திட்டம் நிறைவு பெற்றதும் வழங்கும். இந்தச் சான்றிதழ் இல்லாத வீட்டில் குடியிருப்பது சட்டப்படி குற்றமாகும். முதன்முதலில் ஃபிளாட் கட்டி முடிக்கப்பட்டு, உரிமையாளர் வீட்டில் குடியேறும்போது இந்தச் சான்றிதழ் வழங்கப் படும். இந்தச் சான்றிதழை வீட்டை விற்பவரிட மிருந்து வாங்கி வைத்துகொள்ள வேண்டும்.
தாய்ப்பத்திரங்கள் : தற்போதைய உரிமை யாளருக்கு, அவருக்கு சொத்தை விற்றவரின் சொத்துப் பத்திரம் தாய்ப்பத்திரங்கள் (Parent Document) ஆகும். இப்போது அந்தச் சொத்தை வாங்குபவருக்கு, முந்தைய பத்திரம் அதாவது, தற்போது சொத்தை விற்கப் போகிறவரின் கிரயப் பத்திரம் அல்லது விற்பனை பத்திரம் (sale deed) தாய்ப்பத்திரங்கள் ஆகும். எனவே, பழைய ஃபிளாட் வாங்குபவர் இந்த இருதாய்ப்பத்திரங்களை வாங்கிக்கொள்வது நல்லது.
முந்தைய தாய்ப்பத்திரத்தின் அடிப்படையில் மனை அல்லது சொத்து பலருக்கு விற்கப்பட்டிருக் கும்பட்சத்தில் அந்த தாய்ப் பத்திரத்தின் நகலையாவது வாங்கிக் கொள்ள வேண்டும். தற்போதைய உரிமையாளரின் விற்பனை பத்திரம்தான் சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கான முதன்மையான ஆதாரம். இந்தப் பத்திரத்தின் அடிப்படையில்தான் உங்களுக்கு ஃபிளாட் பத்திரம் செய்து தரப்படும். முதன் முதலில் ஃபிளாட் பதிவு செய்யப்படும். அதன் பிரிக்கப்படாத மனையான யு.டி.எஸ்ஸுக்குத்தான் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படும். ஃபிளாட் மறுவிற்பனை செய்யப்படும் போது யு.டி.எஸ் மற்றும் கட்டடத்தின் மதிப்புக்கும் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.