பெண்களுக்கான பிசினஸ் வாய்ப்புகள்
அதிகப்படியான நபர்களுக்கு ஒரே நேரத்தில் உங்களால் சமைத்துக் கொடுக்க முடியும் என்றால் கேட்டரிங் சர்வீஸ் தொடங்கலாம். வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தினமும் உணவு சமைத்து கொடுக்கும் ஆர்டர் பெறலாம். ஒவ்வொரு நாளும் என்னென்ன மெனு என வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்து, எவ்வளவு பேருக்கு உணவு தேவைப்படுகிறது என்ற விபரங்களை கேட்டறிந்து அதற்கேற்ப உணவு தயாரிக்கலாம். இதனால் உணவு வீணாகுவது தவிர்க்கப்படுகிறது. உங்கள் கைப்பக்குவம் அவர்களை அசத்தினால் உங்கள் வாடிக்கையாளரின் இல்ல விசேஷங்களுக்கும், பணியாற்றும் நிறுவன விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் உணவு தயாரித்துத் தரும் ஆர்டர் உங்களுக்கு கிடைக்கும். தரமான உணவும், சரியான மார்கெட்டிங் பாதையும் இருந்தால் கேட்டரிங் சேவையில் கொடி கட்டிப் பறக்கலாம்.
சமையல் வகுப்பு…
ருசியாக சமைக்கத் தெரியும். ஆனால் வியாபாரம் செய்யவோ, ஆட்களை வைத்து வேலை வாங்கவோ அச்சமாக இருக்கிறதா.. அதனால் என்ன..? ருசியாக சமைப்பது எப்படி என வகுப்பெடுங்கள். இதற்கு எந்தவித முதலீடு தேவை இல்லை. சமையல் கலை கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு சமையல் கற்றுக் கொடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். முடிந்தால் சமையல் வகுப்புகளை ஆன்லைனில் எடுத்து யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து பணம் சம்பாதிக்க முடியும்.
பேக்கரி கடை திறக்கலாம்…
பிரட், பப்ஸ், கேக் போன்றவை உங்களுக்கு செய்யத் தெரியுமா.? கடை அட்வான்ஸ், வாடகை, தளவாடம் என்றெல்லாம் குழம்பாதீர்கள். முதலில் வீட்டு வாசலிலேயே சிறிய அளவில் பேக்கரி கடை திறக்கலாம். பிறந்த நாள் விழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கல்யாண விழாக்களில் கேக் ஆர்டர் அதிகமாகவும் இதர நாட்களில் மற்ற பொருட்களின் விற்பனை அதிகமாகவும் இருக்கும்.
சாக்லேட் தயாரித்தல்…
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் அனைத்து காலகட்டங்களிலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரே பண்டமாக சாக்லேட்கள் திகழ்கிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் இத்தகைய சாக்லெட் தொழில் மிகவும் குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக அதிகம் செய்யப்படுகிறது. உங்களது சாக்லெட்டில் அதிக சுவை மற்றும் தரம் இருந்தால் நீங்கள் ஏற்றுமதி செய்தும் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
பழச்சாறு கடை…
உங்கள் வீட்டு வாசலில் ஒரு சின்ன டேபிள் போட்டு ஜூஸ் கடை திறக்கலாம். போக்குவரத்து குறைந்த பகுதியாக இருந்தால் விற்பனை செய்வது கஷ்டம். கடைவீதியில் உள்ள டீக்கடை மற்றும் உணவு சார்ந்த கடையை ஆராயுங்கள். எங்கே ஜூஸ் கடை வைக்க முடியும் என பாருங்கள். அந்த கடை உரிமையாளரிடம் தனியாக ஜுஸ் ஸ்டால் வைப்பதற்கு அனுமதி கேளுங்கள். அது வாடகை கடை என்றால் நீங்கள் உள்வாடகை கொடுக்க சம்மதம் தெரிவியுங்கள். வாடகை குறைவாகவும், அட்வான்ஸ் இல்லாமலும், பெரிய அளவில் முதலீடு இல்லாமலும், அதே வேளையில் வாடிக்கையாளரை தேடி அலைய வேண்டிய வேலையும் இராது. குறிப்பிட்ட, வேகமாக விற்பனையாகவும் ஆரஞ்சு, ஆப்பிள், சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட நான்கைந்து பழங்களை கொண்டு மட்டும் கடை திறக்கலாம். விற்பனை அதிகரித்த பின் வேறு பழங்களையும் விற்பனையில சேர்க்கலாம்.
இனிப்பு கடை…
ஸ்வீட் ஸ்டால் என்றால் பெரிய பெரிய ஸ்டால்களுடன், பிரம்மாண்ட விளக்கொளியில் அமைத்தால் மட்டுமே வியாபாரமாகும் என நினைக்காதீர்கள். கண்ணைக் கவரும் தளவாடங்கள் எல்லாம் வாடிக்கையாளரின் முதல் வருகைக்குத் தான். அடுத்தடுத்து அவர்கள் வர வேண்டுமென்றால் நீங்கள் தயாரிக்கும் பலகாரத்தின் சுவையில் தான் இருக்கிறது. எனவே சுவையாக பலகாரங்கள் செய்து தரும் திறன் இருந்தால் பலகார ஸ்டால் போடலாம். குறைவான வகைகளில் மட்டுமே பலகார விற்பனையை தொடங்குங்கள்.
ஆர்கானிக் உணவு கடை…
உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்ற வகையான உணவு பழக்கங்களை தவிர்த்து ஆர்கானிக் உணவுகளை மட்டுமே உண்ணுகின்றனர். ஆகவே ஒரு மிகச் சிறந்த உடல்நல மருத்துவமனை அருகிலோ அல்லது உடற்பயிற்சி மையத்தின் அருகில் இத்தகைய ஆர்கானிக் உணவகத்தை அமைத்து உங்களது வியாபாரத்தை பெருக்க முடியும்.