வணிகம் பழகு… தொழில் முனைவோருக்கான தொடர் – 9…. இந்திய தொழிலின் பெருமைமிகு அடையாளம்!
பிஸினஸ் உலகில் யாரையெல்லாமோ சொல்கிறீர்களே, இந்தியர்களின் வணிக அடையாளம் ‘இன்போஸிஸ்’ நாராயணமூர்த்தியை பற்றியும் சொல்லுங்களேன் என்று ஆர்வத்துடன் வேண்டுகோள் வைத்தார் நண்பர் ஒருவர். இவரைத் தவிர்த்து நாம் இந்திய வர்த்தக வரலாற்றை எழுத முடியாது என்பது தான் உண்மை.
உழைப்பு, திட்டமிடுதல், உற்சாகம், ஒருங்கிணைப்பு என்றெல்லாம் தனித்தனியாக சொல்லலாம். இல்லையென்றால், ஒரே வார்த்தையில் ‘நாராயணமூர்த்தி’ என்றும் சொல்லலாம். உலகம் இந்தியாவை வியப்போடு பார்க்க எத்தனையோ காரணங்கள். அவற்றில் முக்கியமான முத்திரைப் பெயர் “இன்போஸிஸ்”. தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் இன்போஸிஸ்ஸி-ன் பங்கு மகத்தானது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் 1946, ஆகஸ்ட் 20ம் தேதி பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு மகனாக பிறந்தவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி. இவரையும் சேர்த்து இவர் தந்தைக்கு எட்டு குழந்தைகள். ஐ.ஐ.டி யில் படிக்க இடம் கிடைத்தும் வசதி இல்லாத சூழலில் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தார். பிறகு மேற்படிப்புக்காக கான்பூர் ஐ.ஐ.டி. யில் சேர்ந்தார். அப்போது தான் கம்ப்யூட்டர் அவருக்கு அறிமுகமானது. அந்த நாட்களில் மிகச் சிலர் தான் கம்ப்யூட்டர் பட்டதாரிகள்.
நாராயணமூர்த்திக்கு ஐந்து இடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது
ஐ.ஐ.எம்., எச்.எம்.டி., இ.ஸி.ஐ.எல்., டெல்கோ, ஏர் இந்தியா. இவற்றில் ஐ.ஐ.எம் நிறுவனத்தை காட்டிலும் மற்றவற்றில் சம்பளம் அதிகம். ஆனாலும், எதிர்காலத்தில் கம்ப்யூட்டருக்கு இருக்கும் வாய்ப்புகளை மனதில் வைத்து மாதம் ரூ.800 சம்பளத்தில் நம்பிக்கையோடு ஐ.ஐ.எம்.மி-ல் வேலைக்கு சேர்ந்தார். இயல்பாகவே கம்ப்யூட்டர் மேல் இருந்த ஆர்வத்தால் ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தார். இடையில் பாரீசில் வேலைக்கு சென்று வந்தார்.
1981ம் ஆண்டு 6 இன்ஜினியர்களுடன் 250 டாலர் முதலீட்டில் இன்போஸிஸை தொடங்கினார். அப்போதெல்லாம் ஒரு கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமென்றால் இரண்டு வருடங்கள் கூட காத்திருக்க வேண்டும். கடும் உழைப்பு, திட்டமிடுதல், விடாமுயற்சியுடன் நண்பர்களுடன் சேர்ந்து கம்பெனியின் வளர்ச்சிக்காக போராடினார். டெலிபோன் இணைப்பு பெறுவதும் அந்த நாட்களில் கடினம். அதனாலேயே பல இலட்சம் மதிப்புள்ள வணிக வாய்ப்புகளை ஆரம்ப நாட்களில் இன்போஸிஸ் இழந்ததுண்டு.
1990ல் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியுமா என்று தடுமாற்றம் வந்த போது, நிறுவனத்தை நன்றாக எடுத்துச் செல்ல முடியும் என்று உறுதியோடு சொன்னார் நாராயணமூர்த்தி.
தொழிலிலும், வணிகத்திலும் சுதந்திரமயமாக்கல் அறிவிக்கப்பட்டது. அதன் மகத்தான பயன்களை பெற்ற நிறுவனங்களில் இன்போஸிஸ்—ம் ஒன்று. தொடர்ந்து உற்சாகமாய் உழைக்க கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது இன்போஸிஸ் குழு.
செயல் வேகமும், கற்பனைத்திறனும் தான் வெற்றிக்கான மகத்தான அளவுகோல்கள் என்கிறார் நாராயணமூர்த்தி. மிக எளிய நிலையில் தொடங்கும் பொழுதும், சிகரங்களைத் தொட்டு வளரும் பொழுதும் கூட்டு முயற்சி, பங்குதாரர் பங்கேற்பு, பணிபுரிவோர் ஒற்றுமை இவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது இன்போஸிஸ் நிறுவனம்.
இவரது வாழ்வில் இணைந்தார் சுதா நாராயணமூர்த்தி. இருவருக்கும் 1978ல் திருமணம் நடைபெற்றது. நாராயணமூர்த்தியின் கனவுகளுக்கு சுதா பின்புலமாக இருந்தார். கணவரின் அனைத்து செயல்களுக்கும் பக்கபலமாக இருக்கிறார்.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 22 நாடுகளில் அலுவலகங்களை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்தியா, சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்ச்சி மையங்களாகவும் திகழ்கிறது.
1996ம் ஆண்டு இன்போசிஸ் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு, உடல்நலம் பேணுதல், கல்வி என சமூகப் பணியாற்றி வருகிறார்.
இந்த அறக்கட்டளை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, ஒரிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிறுவப்பட்டு, சமூக சேவைப் புரிந்து வருகிறது.
மென்பொருள் சேவை நிறுவனங்களின் தேசிய சங்க தலைவராக 1992 முதல் 1994 வரை பதவி வகித்தார் ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி. மேலும் டிபிஎஸ் வங்கி சிங்கப்பூர், ரிசர்வ் வங்கி, என்.டி.டிவி, ஹெச்.எஸ்.பி.சி, யூனிலீவர் போன்ற பல நிறுவனங்களில் மேலாண்மை குழுக்களிலும் பதவி வகித்தார்.
இந்த வெற்றிக்கு காரணமாக நாராயணமூர்த்தி சொல்வது எந்த ஒரு சூழலிலும் நேர்மையாக நடந்து கொள்வதும், சமூகத்திற்கு பயன்படும் விதமாக வாழ்வதும், தன் நிறுவனத்தின் வளர்ச்சி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைத்துக் கொள்வதுமே என்று பெருமையாய் சொல்கிறார்.
பல தொழில் அதிபர்களை சந்தித்து பலப்பல அனுபவப் பாடங்களை படித்துக் கொண்டாயிற்று, நாமும் ஒரு பெருமை வாய்ந்த தொழிலதிபர் ஆக வாங்க தொழில் செய்ய போகலாம்… அடுத்த இதழிலில் நமது புது பிஸினஸ் ஆரம்பம்….!
தங்களது மேலான கருத்துக்களை imagefelixrtn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்கிறோம்.