விரல் ரேகை அல்லது கருவிழிப் படலம் பத்திரப் பதிவில் புதிய முறை அறிமுகம்..!
முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றுடன் இந்து திருமணம், சிறப்பு திருமணம், சங்கம் பதிவு, சீட்டுப் பதிவு, கூட்டு வணிக பதிவு, வில்லங்க சான்று வழங்குதல், சான்றிட்ட நகல் வழங்குதல் போன்ற பல்வேறு வகைகளில் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. விற்பனை, பரிவர்த்தனை, தானம் ஆகிய ஆவணங்களுக்கு சந்தை மதிப்பின் மீது 5% முத்திரை தீர்வையும், 4 சதவீத பதிவு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆவணங்களுக்கு சந்தை மதிப்பின் மீது 2 சதவீதம் மாற்றுத் தீர்வை மிகு வரியும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதர ஆவணங்களுக்கு அதன் தன்மைகேற்ப முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நிகழ் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் முடிய 7,32,991 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.3,342.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சொத்து ஆவணங்களை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவரின் விரல் ரேகை அல்லது கருவிழிப் படலம் தரவுகளை ஆதார் தரவுடன் சரிபார்க்கும் முன்னோடி திட்டமானது, ராஜபாளையம், மத்திய சென்னை, கோவை பீளமேடு, சேலம் தாதகாபட்டி, தஞ்சை மகர், நோன்பு சாவடி, நெல்லை, வேலூர் பள்ளி கொண்டா, விருத்தாசலம், வேப்பூர், திருச்சி, முசிறி ஆகிய 9 இடங்களில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னோடி திட்டமானது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.