தவறான கணக்கில் பணம் செலுத்தினால் என்ன செய்வது..?
ஆன்லைனில் தவறான எண்ணிற்கு நீங்கள் பணம் அனுப்பிவிட்டீர்கள். என்ன செய்வது.? பதற்றமடையாமல் முதலில் நீங்கள் வங்கி அலுவலகத்தை அணுகுங்கள். நடந்தவற்றை கூறுங்கள்.
ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் தவறான கணக்குக்குப் பணம் சென்றுவிட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், பணம் செலுத்தியவரின் வங்கி கணக்குக்கு திரும்ப கிடைக்கும்.
தவறான எண்ணிற்கு பணம் செலுத்துகிறீர்கள் எனில் பணம் செலுத்துபவருக்கு தான் இதில் ரிஸ்க். ஏனெனில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது பயனாளியின் வங்கி கணக்கு எண் மற்றும் மற்ற விவரங்களைக் கொடுப்பது பணம் செலுத்துபவரையே சேரும்.
நீங்கள் பணம் அனுப்பிய கணக்கிற்கான வாடிக்கையாளர் யார் என்பதை வங்கியின் மூலம் கண்டறியுங்கள். அவரின் செல்போன் எண்ணை வங்கியின் மூலம் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறுங்கள். அவர் சரியான நபர் எனில் உங்கள் கணக்கிற்கு அந்த பணத்தை திருப்பி அனுப்பிவிடுவார். தவறான ஆளாகவோ, அல்லது தெரியாமல் நீங்கள் அனுப்பிய பணத்தை அவர் எடுத்து செலவு செய்திருந்தாலோ சிக்கல் தான். பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப் பெற்றுத் தரவும் வங்கி உதவும். அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுண்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தும்.
இதுவே அந்தப் பணத்தை திரும்ப அளிக்க அவர் மறுப்புத் தெரிவித்தால், அவர் மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க முடியும்.