பழையவீடு வாங்க… வீட்டின் சரியான விலை அறியும் வழி…
பொதுவாக, ஒரு பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் விலை மற்றும் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வரும்.
அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகியிருந்தால், தற்போதைய சந்தை விலை யிலிருந்து சுமார் 20% விலை குறைவாக இருக்கும். இதுவே 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் ஆகியிருந்தால் விலை முறையே 25%, 35%, 40% மற்றும் 45-&50% குறைவாக இருக்கும்.
உதாரணத்துக்கு, நீங்கள் வாங்கப்போகும் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்திருக்கும் பகுதியில் புது அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விலை ரூ.3,500 என வைத்துக் கொள்வோம். நீங்கள் வாங்கப்போகும் வீடு 10 ஆண்டுகள் பழையது என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது அந்த வீட்டுக்கு 25% குறைவாக சுமார் ரூ.2,625 விலை கொடுப்பது நியாயமாக இருக்கும். வீட்டின் உரிமையாளர் சதுர அடி ரூ.3,000 சொல்கிறார் என்றால், நீங்கள் ரூ.2,625-க்கு தாராளமாகக் குறைத்துக் கேட்கலாம்.
இதேபோல், எத்தனை ஆண்டுகள் பழையது என்பதற்கு ஏற்ப நீங்களே சரியான விலையை நிர்ணயம் செய்து கேட்கலாம். மற்றும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் சமீபத்தில் பழுது நீக்கி வர்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும் நிலையில் ஒரு நல்ல ஆர்கிடெக்ட் அல்லது பொறியாளர் உதவியுடன் அந்த வீட்டின் கட்டுமானம் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதை மதிப்பிட்டு ஒரு சதுர அடி விலையை நிர்ணயிக்க வேண்டும்.
மேலும், பிரிக்கப்படாத மனை (யு.டி.எஸ்) எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அந்தப் பகுதியில் சதுர அடி மனை என்ன விலைக்குப் போகிறது என்பதைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார சாதனங்கள், குழாய் வேலைகள், மரவேலைகள் ஆகியவற்றுக்கு ஒரு மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் வீட்டின் சரியான விலையை முடிவு செய்யலாம்.
சொத்து விலையை யாரிடம் உறுதிப்படுத்த வேண்டும்? கூடுமான வரையில் சொத்தின் உரிமையாளருடன் விலை விவரம் குறித்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். காரணம், சில தரகர்கள் வீட்டின் உரிமையாளரிடம், உங்களுக்கு இவ்வளவு தொகை தருகிறேன். நான் அதைவிட ரூ.3 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் வைத்து நான் விற்றுக்கொள்கிறேன் எனச் சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் விலை குறித்து சொத்தின் உரிமையாளருடன் பேச தரகர் அனுமதிக்க மாட்டார். இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார் என சொத்து வாங்குபவரிடம் சொல்லக்கூடும்.
தரகர் சொல்லும் விலைக்கு வாங்கும்பட்சத்தில் ஒருவர் அதிக விலை கொடுத்து சொத்தை வாங்கும் நிலை உருவாகும். வாங்கும்போதே அதிக விலை கொடுக்கும்பட்சத்தில், சொத்தின் விலையானது உண்மையான சந்தை விலையை எட்டவே சில ஆண்டுகளாகிவிடும்.
எனவே, சொத்தின் விலை குறித்து அதன் உரிமையாளரிடம் பேசி முடிவு செய்வது நல்லது. மேலே குறிப்பிட்ட அம்சங்களை அலசி ஆராய்ந்து, மிகச் சரியான
விலையைக் கணக்கிட்டு வீடு, மனை வாங்கினால் நிச்சயம் உங்களுக்கு லாபமாக இருக்கும்.