அறிய வேண்டிய தகவல் டப்பா டிரேடிங்
நாம் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டு மெனில், தியேட்டருக்குப் போய் டிக்கெட் எடுத்துப் பார்த்தால், படம் எடுத்தவருக்கு வருமானம் கிடைக்கும். அவர் வரி கட்டினால், அரசுக்கு வருமானம் கிடைக்கும். அதே படத்தை நாம் ஆன்லைனில் டவுன்லோடு செய்து பார்த்தால், அரசுக்கு எந்த வருமானமும் கிடைக்காதில்லையா? அதே மாதிரி பங்குகளை வாங்குவதும் விற்பதும்.
பொதுவாக, நாம் பங்கு வாங்க வேண்டுமெனில், டீமேட் கணக்கு தொடங்கி முறைப்படி வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும்போது அரசுக்குப் பலவித வரி வருவாய் கிடைக்கும். இதே பங்கை எந்த நெறிமுறையும் பின்பற்றாமல், பங்குச் சந்தைக்கு வெளியே வாங்கி, விற்று லாபம் சம்பாதிப்பதே டப்பா டிரேடிங்.
டப்பா டிரேடிங் செய்வ தற்கென பிரத்யேகமான புரோக்கர்கள் இருப்பார்கள். அவர்களிடம் சென்று குறிப்பிட்ட பங்கை அதன் தற்போதைய விலையில் டப்பா டிரேடிங்கில் வாங்கலாம்/விற்கலாம். பங்கு வாங்க/விற்க கட்டணம், அரசு வரி என எந்தச் செலவும் செய்யத் தேவையில்லை.
அட, சூப்பரா இருக்கே என்று சொல்லா தீர்கள். இது முறைப்படுத்தப்படாத வர்த்தகம். தவறு நடந்தால் கேட்க முடியாது. நாம் வாங்கிய பங்குக்கு உரிமையும் கோர முடியாது. பணத்தை வாங்கிக்கொண்டு புரோக்கர் கம்பி நீட்டிவிட்டால் திரும்பவும் வாங்க முடியாது. இவ்வளவு சிக்கல்கள் உள்ள வர்த்தகத்தை சிலர் நாடக் காரணம், கறுப்புப் பணம்தான். சிறு முதலீட்டாளர்கள் இதில் சிக்காமல் இருப்பது மிக மிக நல்லது!