வருமான வரியை மிச்சப்படுத்த வீட்டுக் கடன் மூலம் 2ம் வீடு வாங்கலாமா?
வரிச் சேமிப்பு என்பது கடன் வாங்க அல்லது இரண்டாவது வீட்டை வாங்குவதற்கான காரணமாக இருக்க முடியாது. நம் நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சி அடையவும், நாட்டு மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டுக் கடனுக்கு மத்திய அரசாங்கம் வருமான வரிச் சலுகை தருகிறது.
இந்த வரிச் சலுகை என்பது மட்டுமே வீடு வாங்க தகுந்த காரணமாக இருக்க முடியாது. வீட்டுக் கடனில் வாங்கப்படும் இரண்டாவது வீட்டின்மூலம் உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் நீங்கள் அந்த முடிவை எடுக்க வேண்டும். தவிர, இரண்டாவது வீட்டுக்கான மாதத் தவணையைச் சரியாகச் செலுத்த முடியுமா, இதனால் உங்களின் மற்ற முதலீடுகள் பாதிப்படையுமா என்பதையும் கட்டாயம் கவனித்துவிட்டுத்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும்.”
வட்டி என்பது ஒரு செலவுதான். அதேபோல, வரி என்பது ஒரு செலவுதான். நீங்கள் கடன் வாங்கி ரூ1,000 வட்டி செலுத்தினால், நீங்கள் ரூ.1,000 செலவிடுகிறீர்கள். இப்படி 1,000 ரூபாயை நீங்கள் செலவழிப்பதன் அடிப்படையில் ரூ.300 (சில நிபந்தனைகள் மற்றும் அடிப்படை வருமான வரி வரம்புகளுக்கு உட்பட்டு) சேமிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது, ரூ.300 சேமிக்க ரூ.1,000 செலவிடுகிறீர்கள். இது மிகவும் புத்திசாலித்தனமான வழியா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.