வங்கி திவாலானால் பணம் கிடைக்குமா?
வங்கியில் ஒருவர் போட்டு வைத்திருக்கும் முழுத் தொகைக்கும் உத்தரவாதம் கிடையாது. வங்கி திவாலாகும்பட்சத்தில் வங்கியில் ஒருவர் போட்டு வைத்திருக்கும் தொகையில் வட்டியுடன் சேர்த்து அதிக பட்சம் ரூ.5 லட்சத்துக்குதான் உத்தரவாதம் இருக்கிறது.
இது குறிப்பிட்ட வங்கியின் சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் மொத்த தொகைக்கான வரம்பு ஆகும். உதாரணமாக, ஒரு வங்கியின் இரு கிளைகளில் ஒருவருக்கு சேமிப்புக் கணக்கு மற்றும் டெபாசிட் இருந்தால், இவை அனைத்தும் சேர்த்துதான் ரூ.5 லட்சம் என்கிற வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக உத்தர வாதம் தேவைப்படுபவர்கள் வெவ்வேறு வங்கிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பணத்தைப் பிரித்துப் போடலாம்.
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்துக்கான காப்பீட்டை வங்கி எடுத்திருக்கும். இந்தக் டெபாசிட் காப்பீட்டை ஆர்.பி.ஐ-யின் வலியுறுத்தலின் பேரில் இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கி கள், வெளிநாட்டு வங்கிகள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் என அனைத்து வங்கிகளும் எடுத்திருக்கின்றன.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெபாசிட் இன்ஷூரன்ஸுக்கு உங்கள் வங்கி பிரீமியம் கட்டி வருகிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்வது நல்லது. இந்த விவரத்தை https://www.dicgc.org.in/ என்ற இணைப்பில் தெரிந்து கொள்ள முடியும்.