நடுத்தர மக்களின் பர்சை பதம்பார்க்கும் நிறுவனங்கள்!
புதிதாக வியாபாரம் துவங்குபவர்கள் வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்து கொள்ள பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். மேலும், தரம் விலையில் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதே நிறுவனங்கள் பல்வேறு கிளைகளுடன் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்ற உடனே தரம் மற்றும் விலையில் அலட்சியம் காட்டுகின்றனர்.
53 வருடங்களாக பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் உணவகம் திருச்சி மலைக்கோட்டை பகுதியிலும் இயங்கி வருகிறது. கடைவீதிக்கு வரும் மக்களின் கூட்டம் எப்போதும் இக்கடையில் இருந்து கொண்டே இருக்கும்.
இங்கு மதிய வேளையில் அளவு சாப்பாடு சாப்பிட முடிவு செய்து சென்ற போது அளவு சாப்பாடு ரூ.80 என எழுதப்பட்டிருந்தது. அளவு சாதம், சாம்பார், ரசம், பொறியல், அப்பளம், கீரை, தயிர் என கொண்டு வரப்பட்டது. சாப்பிட்ட பின்னர், பில்லைக் கண்ட போது ரூ.100 என இருந்தது.
இதுகுறித்து, கேட்ட போது தயிர் மற்றும் கீரை 20 ரூபாய், அளவு சாப்பாடு எனில் தயிர் மற்றும் கீரை இடம்பெறாது என கூறினர். அளவு சாப்பாடு என சாதமும் அதிகம் வாங்காமல் சாப்பிட்டு எழுந்த பின் இப்படி கூறினால் என்ன செய்வது, தற்போது எங்கு பார்த்தாலும் தெருவுக்கு தெரு சிறிய பெரிய உணவகங்கள் அமைந்துள்ளது.
சிறிய உணவங்களில் கூட அளவு சாப்பாடுடன் கீரை, தயிர், பொறியல், கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், வத்தகுழம்பு என கொடுத்து வரும் நிலையில் வளர்ந்த பெரிய நிறுவனம் இப்படி நடுத்தர மக்களின் பர்ஸை குறி பார்ப்பது வேதனையாக உள்ளது.
இதுவும் ஒரு ஏமாற்றுதான்…
சென்னையில் தமிழ் கடவுள் பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஒரு உணவகத்தில் சாப்பிட சென்ற போது, ஆர்டர் செய்யாமலே தொன்னையில் ஒரு ஸ்வீட் கொடுக்கப்பட்டது. பின்னர், ஆர்டர் செய்த உணவுகள் கொண்டு வரப்பட்டது.
சாப்பிட்ட பின் வழங்கப்பட்ட ஸ்வீட்டிற்கும் பில் போடப்பட்டிருந்து. ஆர்டர் செய்யாமலே இலவசமாக வழங்குவது போல் கொடுத்து சாப்பிட்ட பின்னர் பில் கேட்பது வேதனையாக உள்ளது.