வங்கிக் கடன் ஜாமீன் கையெழுத்து போடுறீங்களா…?
வங்கியில் கடன் வாங்கச் செல்லும் போது கியாரண்டர் கொடுங்கள் என்று கேட்பார்கள். இப்போது, ‘நான் கடன் வாங்குகிறேன். அதனை ஹைபாதிக்கேட் செய்கிறேன். சில நேரங்களில் கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுக்கிறேன். இவற்றைத் தாண்டி கியாரன்டர் எதற்காக?’ என்ற சந்தேகம் வாடிக்கையாளருக்கு வரலாம்.
சரி, கியாரன்டி அல்லது ஜாமீன் என்றால் என்ன? – எளிமையாக சொல்வதானால், வாடிக்கையாளர் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்த தவறும் பட்சத்தில் நான் அந்தக் கடனனை திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று வாடிக்கையாளர் சார்பாக வங்கிக்கு ஒருவர் உத்தரவாதம் அளிப்பது என்று பொருள்.
யார் ஜாமீன் போட முடியும்? – ஒருவேளை வாடிக்கையாளரால் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு திறன், வசதி உள்ளவர்கள், கடன் பெற்றவரை திருப்பிச் செலுத்தும் படி சொல்லும் உரிமை உள்ளவர்கள் மட்டுமே ஜாமீன் கையெழுத்து போட முடியும். கடன்பெறுபவருக்கு இருக்க வேண்டிய நன்னடத்தை, திருப்பி செலுத்தும் திறன் எல்லாமும் ஜாமீன் கையெழுத்து போடுபருக்கும் இருக்க வேண்டும். இதில் முக்கியமான ஒரு விஷயம் ஜாமீன் கையெழுத்து போடுபவர்களுக்கு கடன் தொகைக்கு நிகராக சொத்து இருக்க வேண்டும்.
ஜாமீன்தாரரும் கடனுக்கு பொறுப்பு: வாடிக்கையாளர் வங்கிக் கடனை சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால், ஜாமீன்தார் மீதும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டப்படி கடன் பெற்றவர் அந்தக் கடனைத் திருப்பி செலுத்தும் வரையில் ஜாமீன் கையெழுத்திட்டவர்களும் கடன் மீதான பொறுப்புகள் இருந்து கொண்டே இருக்கும். வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் அது தொடப்பாக ஜாமீன் கையெழுத்திட்டவருக்கு வங்கி கடன் நிலுவைத் தொடர்பாக ரிமைண்டர் நோட்டீஸ் அனுப்ப முடியும்.
அதே போல ரீ கால் நோட்டீஸூம் ஜாமீன் கையெழுத்திட்டவருக்கே அனுப்பப்படும். தற்போது, கடனைத் திருப்பிச்செலுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஜாமீன் கையெழுத்திட்டவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்? – இந்த சிக்கல்களை தவிர்க்க, கடன் வாங்கியவர், ஜாமீன் கையெழுத்திட்டவர் இருவரும் சேர்ந்து வங்கிக்கு சென்று கடனைத் திருப்பி செலுத்த முடியாததற்கு சரியான காரணத்தை சொல்லி, கடனை எப்படி திருப்பி செலுத்த போகிறோம் என்று எழுத்துபூர்வமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
அப்படிச் செய்யும்போது வங்கி மேலே சொன்ன கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வாய்ப்பு உண்டு. அதனால் ஜாமீன் கையெழுத்து போடும் போதும், வாங்கும் போதும் கவனமாக இருங்கள்.