ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த முதல்வரின் மகள்:
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மோசடியில் படித்தவர்களே சில நேரங்களில் சிக்கிக் கொள்கின்றனர் எனக் கூறுகிறது காவல்துறை.
சமீபத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா இந்த மோசடியில் சிக்கி இருக்கிறார். ஹர்ஷிதா, வீட்டில் இருக்கும் பழைய சோஃபா ஒன்றை ஒ.எல்.எக்ஸ். மூலம் விற்பனை செய்ய முடிவெடுத்து சோஃபாவை புகைப்படம் எடுத்து ஒ.எல்.எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதனை பார்த்த ஒருவர் அந்த சோஃபா வை தான் வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார். இருவருக்கும் இடையே விலை முடிவானது. பணத்தை அனுப்ப வங்கிக்கணக்கை சரி பார்க்க சோஃபா வாங்குபவர் முதலில் சிறிய தொகையை ஹர்ஷிதா வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் க்யூஆர் கோடு ஒன்றை அனுப்பி அதனை ஸ்கேன் செய்யும்படியும் அப்படி செய்தவுடன் எஞ்சிய பணத்தை அனுப்புவதாக சோஃபாவை வாங்குபவர் தெரிவித்துள்ளார். அந்த நபரின் சதி தெரியாமல் ஹர்ஷிதாவும் ஸ்கேன் செய்தார். அடுத்த சில நிமிடத்தில் ஹர்சிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக ஹர்ஷிதாவுக்கு செய்தி வந்தது.
இது குறித்து ஹர்ஷிதா அந்த நபரிடம் கேட்டதற்கு, `”தவறான க்யூஆர் கோடை அனுப்பிவிட்டேன். மறுபடியும் வேறு ஒரு க்யூஆர் கோடு அனுப்புகிறேன். அதனை ஸ்கேன் செய்த பிறகு தவறாக தனக்கு வந்த பணம் மற்றும் சோஃபாவுக்கான பணத்தை சேர்த்து அனுப்புவதாக கூறியுள்ளார்.
இழந்த பணத்தை பெறும் நோக்கத்தில், ஹர்ஷிதா அந்த நபர் இரண்டாம் முறை அனுப்பிய க்யூஆர் கோட்டையும் ஸ்கேன் செய்துள்ளார். இப்போது மீண்டும் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.14 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதா, அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது, முடியவில்லை. இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லி முதல்வரின் மகளே ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.