மேலும் 27 துறைகளுக்கு நீட்டிக்கப்படும் அவசரகாலக் கடன் திட்டம்..!
கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறு குறு நடுத்தர நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து அவசரகால கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது.
சிறு குறு தொழில்முனைவோர்கள் அதிக பட்சமாக ஏற்கனவே வாங்கி இருக்கும் கடன் நிலுவைத் தொகையில் 20 சதவீதம் வரை அல்லது 25 கோடி ரூபாய் வரை சிறு குறு நிறுவனங்கள் இத்திட்டத்தில் கடன் வாங்கலாம். இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் உரிமையாளர்களும் கடன் பெறலாம் என்று மத்திய அரசு பின்னர் அறிவித்தது.
இந்நிலையில், இந்த அவசரகாலக் கடன் திட்டம் மேலும் 27 துறைகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கமாத் குழுவின் பரிந்துரைப்படி, ரியல் எஸ்டேட், ஜவுளி, கட்டுமானம், மருந்து, சுகாதாரம், லாஜிஸ்டிக்ஸ், சிமெண்ட், ஆட்டோ பாகங்கள், ரெஸ்டாரண்ட், சுற்றுலா, ஹோட்டல், மின்சாரம் உள்ளிட்ட 27 துறைகளுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது.
நவம்பர் 12ஆம் தேதி நிலவரப்படி, இந்த அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இணைந்து 61 லட்சம் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.2.05 லட்சம் கோடியைக் கடனாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளன. அதில் ரூ.1.52 லட்சம் கோடி வழங்கப்பட்டுவிட்டது.