தொழிற்சாலைகளுக்கான சுற்றுச்சூழல், அனுமதிக்கான காலம் நீட்டிப்பு..!
தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கு மற்றும் இசைவாணை புதுப்பித்தலின் (Renewal of Consent) கால அவகாசத்தை அதிகரித்து உள்ளது. இதன்படி சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளும், பச்சை வகை தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளாகவும் கால அவகாசத்தை அதிகரிக்குமாறு (மொத்த கட்டணத்தை கட்டும் பட்சத்தில்) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளது. இது சிறு, குறு வணிகங்கள் எளிதாக அமைவதற்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்குமான முன்னெடுப்பு என்று அரசு கூறியுள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகளின்படி, தொழிற்சாலைகள் மாசு குறியீட்டின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என்று 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கான இசைவாணை – Consent to Establish (CTE) எனப்படும். தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்கான இசைவாணை Consent to Operate (CTO) எனப்படும்.
இது சிவப்பு தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளும், ஆரஞ்சு தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளும், பச்சை தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளும் செல்லுபடியாகும். அதன் பிறகு இந்த இசைவாணை புதுப்பிக்கப்பட வேண்டும். அப்படி புதுப்பிக்கப்படும் இசைவாணை Renewal of Consent (RCO) என்று வழங்கப்படுகிறது.
இந்த புதுப்பித்தல் காலமானது சிவப்பு வகை தொழிற்சாலைகள் ஆண்டுக்கு ஒருமுறையும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு, கழிவுநீர் சுத்தகரிப்பு மற்றும் காற்று மாசு கட்டுப்பாடு நெறிமுறைகளை வாரியத்திற்கு திருப்தி தரும் வகையில் செயல்படுத்தும் காலம் வரை ஆண்டுக்கு ஒருமுறையும், பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பச்சை வகை தொழிற்சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும், அதே நேரத்தில் மொத்த கட்டணத்தையும் கட்டும் பட்சத்தில், சிவப்பு/ஆரஞ்சு/பச்சை தொழிற்சாலைகள் 5/10/14 ஆண்டுகள் வரை புதுப்பிக்கத் தேவையில்லை எனவும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய நெறிமுறைகள் கூறுகின்றன.
ஆனால், நடைமுறையில் சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு ஓராண்டும், ஆரஞ்சு, வெள்ளை வகை தொழிற்சாலைகளுக்கு இரண்டு ஆண்டுகளும் இசைவாணை வழங்கப்பட்டு வந்தது.