அரசின் குறைவான வரி விதிப்பு, டாஸ்மாக்கில் குளறுபடி….
தமிழக அரசிற்கு ரூ.1,950 கோடி இழப்பு..!
2019ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்த 2018-&19ம் நிதி ஆண்டுக்கான வருவாய் மற்றும் பொருளாதாரப் பிரிவிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படடது.
அதில், 2015-&16ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.1,02,074 கோடியாகும். இதில், ரூ.1,05,519.90 கோடி வரி மூலம் பெறப்பட்டது. ரூ.14,200 கோடி வரியில்லாத வருவாயாகும் மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து வரிப்பங்காக ரூ.30,023 கோடியை தமிழகம் பெற்றது.
மத்திய அரசிடம் இருந்து மானியமாக ரூ.23,368 கோடியை தமிழக அரசு வாங்கியது. அந்த வகையில் 2017-&18-ம் ஆண்டில் வந்த மொத்த வருவாயில் தமிழக அரசால் ஈட்டப்பட்ட வருவாய் 69 சதவீதமாகும். ஆனால் 2017-&18- ம் ஆண்டில் இது 71 சதவீதமாக இருந்தது.
விற்பனை வரி, சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்டி) ஆகியவை தமிழக அரசின் வரி வருவாயில் 77 சதவீதம் பங்கு வகிக்கின்றன. எனவே ஜிஎஸ்டி வணிகவரி, வாகன வரி, ஆயத்தீர்வை முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம், மின்சார வரி, நிலவரி வருவாய் போன்றவை குறித்து தணிக்கை செய்யப்பட்டது
அதில், 4,328 இனங்களில் ரூ.1,950.11 கோடி அளவிற்கு குறைவாக வரி விதித்தல், வருவாய் இழப்பு போன்றவை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது போன்ற குறைபாடுகள், முந்தைய ஆண்டிலும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன.
டாஸ்மாக் கடைகள் அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்றதோடு பண ரசீதையும் அளிக்கவில்லை. இந்த மீறல்களை சம்பந்தப்பட்ட துறை சோதனை செய்யவில்லை. மது உற்பத்தியாளர்களுக்கு மது தேவைக்கான பட்டியலை அளிப்பதில் ஒளிவுமறைவற்ற முறையை டாஸ்மாக் கடைபிடிக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் 3 வெளிநாட்டு மதுபான உற்பத்தியாளர்களின் தயாரிப்பில் வேறுபாடு காணப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .