கடந்த மே மாதத்தில் ரூ.1.02 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
கடந்த மே மாதத்தில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயாக ரூ .1,02,709 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 8 ஆவது மாதமாக ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் கடும் பின்னடைவைச் சந்தித்தன . அதன் காரணமாக சரக்கு சேவை வரி வருவாயும் குறைந்தது. முக்கியமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் குறைந்தபட்ச அளவாக ரூ.32,172 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது.
பொது முடக்கத்துக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகள் சீரடைந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சரக்கு சேவை வரி வருவாய் தொடர்ந்து ரூ.1லட்சம் கோடியை கடந்து வருகிறது.
கடந்த மே மாதத்தில் ரூ.1,02,709 கோடி சரக்கு சேவை வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது . அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.17,592 கோடியும், மாநில சரக்கு சேவைவரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ. 22,653 கோடியும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக ஐஜிஎஸ்டி ரூ.53,199 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ்வரியாக ரூ.9,625 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் குறைவான ஜிஎஸ்டி வருவாயே கடந்த மாதத்தில் கிடைத்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாத வருவாய் 65 சதவீதம் அதிகமாகும்.