வரலாறு முக்கியம் மக்களே..! அழகு நட்சத்திரங்களின் சோப்…
குளியல் சோப் என்பது ஏதோ நவீன கால கண்டுபிடிப்பு என நினைத்து விட வேண்டாம். 1850-க்கு முன்பே அது வியாபாரத்துக்கு வந்து விட்டது. இந்தியா, பிரிட்டிஷ்காரர்களின் அதிகாரத்துக்குக் கீழே வந்த பிறகு, லீவர் பிரதர்ஸால் சோப் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மிருகக் கொழுப்பு, கிளிசரின் போன்ற மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அத்துடன், விலையும் அதிகம் என்பதால், சாமான்யர்களால் பயன்படுத்தப்பட முடியவில்லை.
1885-ம் ஆண்டு மிருகக் கொழுப்புக்குப் பதிலாக, வெஜிடபிள் ஆயில் அல்லது பாமாயில் பயன்படுத்தி முதன்முதலாக இங்கிலாந்தில் சன்லைட் சோப் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டது. 1892-ம் ஆண்டு பி.சி.ரே-யால் ஆரம்பிக்கப்பட்ட பெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மாசூட்டிகல் நிறுவனமானது மிருகக் கொழுப்பு இல்லாத `கார்பாலிக்’ சோப் ஒன்றைத் தயாரிக்க ஆரமபித்தது. .
இயற்கைப் பொருள் எதுவும் கலக்காத கெமிக்கல்களைக் கொண்டு மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்தியத் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது சந்தைப்படுத்தலில் தலையாய பிரச்னையாக இருந்தது.
ஆனால், குளியலுக்கு சோப் உபயோகப்படுத்த வேண்டுமென்பதும், சுதேசிப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென்ற வேட்கை யும் மக்களிடையே இருந்ததால் இந்தப் பிரச்னையை வெகுவாகக் குறைத்தது.
1918-ம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி டாடா கொச்சினை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ‘ஒகே கோகோனெட் ஆயில் மில்ஸ்’ என்கிற நிறுவனத்தை விலைக்கு வாங்கி, அதை டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி (ஜிளிவிசிளி) எனப் பெயர் மாற்றி சோப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். அதன்பின், ஸ்வதிக் ஆயில் மில்ஸ், ஈஸ்ட் ஏசியாடிக், பாம்பே சோப் ஃபேக்டரி, குஸும் புராடக்ட்ஸ் ஆகியவை ஹமாம், குட்டிக்குரா, வின்ட்சர் போன்ற பிராண்டுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த ஆரம்பித்தன.
1941-ம் ஆண்டு யூனிலீவர் நிறுவனம் `அழகு நட்சத்திரங்களுக்கான சோப்’ என்கிற பெயரில் ‘லக்ஸ்’ சோப்பை விளம்பரம் செய்ய ஆரம்பித்தது. இதற்கு முதன்முதலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட மாடல், நடிகை லீலா சிட்னிஸ். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அதாவது, 1938-ம் ஆண்டு ‘லைஃபாய்’ சோப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.