ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
பெரும்பாலான வங்கிகளில் சேமிப்புக் கணக்குடன் இணைந்த ஃபிளெக்ஸி டெபாசிட்டுகள் இருக்கின்றன. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை ரூ.5,000 என்று வைத்துக்கொள்வோம். ஒருவரின் சேமிப்புக் கணக்கில் ரூ.25,000 இருக்கிறது எனில், குறைந்தபட்ச பராமரிப்புத் தொகைக்கு அதிகமாக உள்ள ரூ.20,000 ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குக்கு தானே மாறிவிடும். இதை ஃபிளெக்ஸி டெபாசிட் என்பார்கள்.
அதே நேரத்தில், நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து எந்த நேரத்திலும் 25,000 ரூபாயை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கில் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும்பட்சத்தில் உங்கள் சேமிப்புக் கணக்கு மூலமான வழக்கமான வட்டியைவிடக் கூடுதல் தொகை கிடைக்கும். வங்கி சேமிப்புக் கணக்கு ஒருவருக்கு அத்தியா வசியம் என்பதால், அந்தக் கணக்கு மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது.
நிதி ஆண்டில் வங்கி சேமிப்புக் கணக்கு மூலமான வட்டிக்கு 60 வயதுக்கு உட்பட்ட தனிநபர்களுக்கு வருமான வரிப் பிரிவு 80ஜிஜிகி-யின்கீழ் ரூ.10,000 வரைக்கும் வரி இல்லை. இந்த வரம்பு ஒருவருக்கு அவரின் வங்கி, தபால் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் சேமிப்புக் கணக்குகள் மூலம் கிடைத்த மொத்த வட்டித் தொகை ஆகும்.
வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி வருமானத்துக்கு டி.டி.எஸ் (மூலத்தில் வரி பிடித்தம்) கிடையாது. ரூ.10,000-க்கு மேற்படும் வட்டி ஒருவரின் வருமானத்துடன் இதர வருமானம் எனச் சேர்க்கப் பட்டு, அவர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய வரிமுறைப்படி 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வரி பிடிக்கப்படும்.
இதேபோன்ற சலுகை மூத்த குடிமக்களுக்கு பிரிவு 80TTB-யின்கீழ் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி ஆகியவை எல்லாம் சேர்ந்து நிதி ஆண்டில் ரூ.50,000 வரைக்கும் வருமான வரி இல்லை!



