ஆடிட்டர் உதவி இல்லாமல் நீங்களே வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஆடிட்டரின் உதவி இல்லாமல் நீங்களே உங்களது ஐடிஆர் 1 படிவத்தை பூர்த்தி செய்து வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ஐடிஆர் படிவம் 1 ஐடிஆர் படிவத்தை மின்னணு முறையில் ஆன்லைனில் அல்லது ஆப் லைனில் பதிவு செய்யலாம். ஆன்லைனில் ஐடிஆர் படிவம் 1 தாக்கல் செய்தால் தனிப்பட்ட விவரங்கள், சம்பள விபரங்கள், டிவிடெண்ட் வருமானம், வட்டி வருமானம் உள்பட அனைத்து தகவல்களும் நிரப்பப்பட வேண்டும். நீங்கள் ஆப்லைன் முறையை பயன்படுத்தினால் புதிய வருமான வரி போர்ட்டலில் இருந்து பதிவிறக்கபட்டு முன் நிரப்பப்பட்ட JSON டேட்டாவை பயன்படுத்த வேண்டும்.
ஆன்லைன் இந்த நிலையில் படிவம் 1 மூலம் ஆடிட்டர் உதவி இல்லாமல் ஆன்லைன் மூலம் வருமான வரி தாக்கல் செய்வதற்கான செயல்முறையை தற்போது பார்ப்போம். முதலில் வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.incometax.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பான் எண்ணை பயனர் ஐடியாக உள்ளிட்டு பாஸ்வோர்டை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் E-File> Income Tax Returns-> என்ற ஆப்ஷனுக்கு சென்று, மெனுவில் உள்ள ‘File Income Tax Return’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் வருமான வரி செலுத்தும் ஆண்டை தேர்வு செய்து, ஆன்லைன் என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்து ஐடிஆர் படிவம்1 என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனையடுத்து “தொடங்குவோம்“ என்பதைக் கிளிக் செய்யவும். தனிப்பட்ட தகவல் முதல் ஆப்ஷனாக வரி செலுத்துபவரின் சுயவிவரம் குறித்த தகவல் கேட்கும். அதாவது உங்கள் பெயர், முகவரி, பான், ஆதார் எண், பிறந்த தேதி, மொபைல் எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி, வேலையின் தன்மை, தாக்கல் செய்யும் பிரிவு மற்றும் வங்கி விவரங்கள் ஆகிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்கு இருந்தால் திரும்பி வரும் பணம் எந்த கணக்கிற்கு வர வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். வருமானம் அடுத்ததாக வருமானம் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். சம்பளம், ஓய்வூதியம், வீட்டு வாடகை, இதர வருமானம், ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை பதிவு செய்ய வேண்டும்
விலக்குகள் : இந்த பிரிவில் உங்களுக்கான வருமான வரி விலக்குகள் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பிரிவு 80சி கீழ் வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டு பிரீமியம், பிரிவு 80டி கீழ் மருத்துவ காப்பீட்டு பிரீமியம். 80டி கீழ் வரும் அரசு, தொண்டு நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு கொடுத்த நன்கொடைகள், 80TT கீழ் வரும் வீட்டு வாடகை, 80டிடிஏ கீழ் வரும் வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி ஆகிய வருமானங்களை மொத்த வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம்.
முன்கூட்டி செலுத்தப்பட்ட வரி இந்த பகுதியில் படிவம் 26AS/AIS ஆகியவற்றில் இருந்து டிடிஎஸ், டிசிஎஸ், முன்கூட்டிய வரி, சுய மதிப்பீட்டு வரி என ஏற்கனவே செலுத்தப்பட்ட வரி விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மொத்தம் அடுத்த பக்கத்தில் மொத்த வருமானம், செலுத்தப்பட்ட வரிகள், செலுத்த வேண்டிய வட்டி, தாமதக் கட்டணம் ஆகிய விவரங்கள் இருக்கும். உங்களுக்கு ஏதேனும் திரும்ப வர வேண்டிய தொகை இருந்தால் இதில் அந்த தொகை உங்களுக்கு காட்டும்.
உறுதிமொழி பக்கம் அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்து உறுதிமொழி பக்கத்தையும் சரிபார்த்து உங்கள் வருமான வரியை நீங்கள் சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த விவரங்களை டவுன்லோடு செய்து வைத்து கொண்டால் எதிர்கால குறிப்புகளுக்கு பயன்படும்
எஸ்.எம்.எஸ் வருமானம் தாக்கல் செய்யப் பட்டவுடன் வருமான வரித்துறை உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் அனுப்பும். அதில் நீங்கள் வருமான வரி படிவத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்துவிட்டீர்கள் என்ற ஒப்புகை விவரங்கள் இருக்கும்.