ஆன்லைன் மூலம் காப்பீடா? உஷார்.. உஷார்..!
லாரி, வாடகைக் கார் உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களுக்கு போலியாக வாகன காப்பீடு வழங்கி, கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
வாகனம், விபத்தில் சிக்கி சேதமானால், திருடு போனால் இழப்பீடு பெறுவதற்கு வாகன காப்பீடு உதவுகிறது. வாகனம் மோதி மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பிற்கும் உதவும் வகையில் காப்பீடு விதிகள் கை கொடுக்கிறது. யூனைடெட் இந்தியா, நியூ இந்தியா அசுரென்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் என அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் உள்ளன.
டிஜிட்டல் இந்தியாவில் எல்லாவற்றிற்கும் ஆன்லைன் வசதிகள் வழங்கப்பட்டு வருவதால் காப்பீடும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் காப்பீடு பெறும் முறையில் உள்ள குளறுபடிகளை வைத்து, ஒரு கும்பல் பெரும் மோசடியில் இறங்கி, கோடிக்கணக்கில் சுருட்டியது அம்பலமாகியுள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் விபத்தில் சிக்கிய தனது லாரிக்கு காப்பீடு பெற முயன்ற போது தான் தெரிந்தது, அவரிடம் இருப்பது போலிக் காப்பீடு என்று.!
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான யூனைடெட் இந்தியா என்ற பெயரில் பெறப்பட்ட அந்த போலிக் காப்பீடு தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் அந்த மோசடிக் கும்பலை சுற்றி வளைத்திருக்கின்றனர். எந்த செல்போன் மூலம் காப்பீடு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, அதன் ஐ.பி முகவரி ஆகியவற்றை வைத்து இந்த கும்பலைப் பிடித்துள்ளனர். பிடிபட்ட மோசடிக் கும்பலிடம் இருந்து ரூ.9,54,000 ரொக்கமும், 133 சவரன் தங்க நகைகள், செல்போன், கார் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மோசடிக் கும்பலின் தலைவன் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன், ஏஜெண்ட்கள் ஆனந்த், கீரனூர் அன்சார் ஹரி ஜெயின், அலாவுதீன், செந்தில் குமார் மற்றும் சுப்பு என்கிற சுமதி உள்ளிட்ட 6 பேரைக் கைதாகியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் ஏஜெண்ட்களாகப் பணி புரிந்த அனுபவத்திலும், தொடர்புகள் மூலமும் இந்த மோசடியை கடந்த நான்கு வருடங்களாக செய்து வந்துள்ளனர்.
கமர்ஷியல் வாகனங்களுக்கு காப்பீடு பெறுவதென்றால் வாகனம் ஒன்றுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவு ஆகும். ஆனால், ரூ.10,000 கொடுத்தால் போதும், காப்பீடு பெற்றுத் தருகிறோம் என ஆசைகாட்டி, லாரி உரிமையாளர்களிடம் வாகன விவரங்களைப் பெற்றுள்ளனர்.
பின்னர் பாலிசி பஜார் இணைய தளம் மூலம் ஆன்லைனில் இரு சக்கர வாகனத்திற்கான காப்பீட்டை லாரியின் பதிவெண்ணைக் கொடுத்து அதற்கான காப்பீடு நகலை பதிவிறக்கம் செய்துள்ளனர். பின்னர், பதிவிறக்கம் செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்திற்கான காப்பீட்டில், லாரிக்கான காப்பீடு போல போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
ஆன்லைன் மூலம் வாகன காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, குறிப்பிடும் வாகன எண் போலியானதா? இரு சக்கர வாகனத்தின் எண் தானா ? என்பதை காப்பீடு நிறுவனங்களால் உறுதிப்படுத்த இயலாததால், போலிக் காப்பீடு தயாரிக்கும் கும்பலுக்கு சாதகமாக உள்ளது என்றும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இயங்கும் “வாகன்” என்ற இணையதளத்துடன், காப்பீடு நிறுவனங்கள் இணைக்கப்படாததால் போலி வாகன எண்களை சரி பார்க்க முடியவில்லை எனவும் போலீசார் கூறுகின்றனர்.