காளான் வளர்ப்பில் முதலீடோ ரூ.20,000…. மாத வருமானமோ ரூ.30,000..!
காளான் தற்போது அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய உணவு பொருளாக மாறிவிட்டது. பல்வேறு சிறு தொழில்களுக்கு மத்தியில் காளான் வளர்ப்பும் ஒரு தொழிலாக வளர்ந்து வருகிறது. பல்வேறு சிறு தொழில் பயிற்சிகளை வழங்கி வரும் அமைப்புகள், காளான் வளர்ப்பு பயிற்சியும் வழங்கி வருகின்றன.
திருச்சி மாவட்டம், கீழவயலூரில் பிறந்து வளர்ந்த கணேஷ் சரவணன் எம்.எஸ்.சி. அக்ரிகல்ச்சர் முடித்து, காளான் வளர்ப்பு சம்பந்தமான சிறப்பு பிரிவிலும் தேர்ச்சி பெற்று, இவர் சார்ந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 15 பேரினை தன்னுடன் இணைத்துக் கொண்டு “காளான் விவசாயிகள்” என்ற பெயரில் விற்பனை நிலையத்தை தொடங்கி காளான் வளர்த்து விற்பனை செய்வதோடு, காளான வளர்ப்பு குறித்து பலருக்கும் பயிற்சி வழங்கி வருகிறார். அவரை சந்தித்து நமது ‘பிசினஸ் திருச்சி’ வாசகர்களுக்காக காளான் பற்றியும், வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடினோம்.
-உணவில் காளான் முக்கிய பங்காற்றி வருகிறது. திடீரென இப்படி தமிழர்களின் உணவு பழக்கங்களில் காளான் எப்படி வந்தது.?
பல ஆண்டுகளாகவே காளான் மக்களின் உணவு பழக்கங்களில் இருந்து வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆரம்ப காலத்தில் காளான் ஏழைகளின் உணவுப் பொருளாகத் தான் இருந்தது. சமீப காலங்களில் தான் காளானை அனைவரும் உண்ணும் ஒரு உணவுப் பொருளாக பார்க்கப்படுகிறது.
காளான் எங்கு, எப்படி வளர்கிறது..?
காளான் என்பது மண்ணில் மீது வளரும் ஒரு பூஞ்சை தாவர உயிரினமாகும். பெரும்பாலும், குளிர் பிரதேசங்களிலும் நம் திருச்சி போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் மழை மற்றும் குளிர் காலங்களிலும் காளான் வளர்ந்திருப்பதை காணலாம். ஒரு சிறு அறையில், பத்துக்குப் பத்து அளவில் குறுகிய இடம் இருந்தாலே போதும், அங்கு காளான் வளர்க்கலாம். நல்ல காற்றோட்டத்துடன் 75-80% ஈரப்பதத்துடன், அறையின் வெப்பநிலை 25 முதல் 28 டிகிரி வெப்பநிலை கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வளவே.
திருச்சியின் தட்பவெப்ப சூழலில் சிப்பிக் காளான், பால் காளான் என இரண்டு வகை காளான்களை விளைவிக்கலாம். சிப்பிக் காளானை குளிர் காலத்திலும் பால் காளானை கோடை காலத்திலும் விளைவிக்கலாம். பட்டர் காளான்களை குளிர் பிரதேசங்களில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். விதையிட்டு பின் 21ம் நாள் முதல் காளான் அறுவடை செய்யலாம்.
காளானை பொறுத்தவரை ஆயிரம் வகைகளுக்கு மேல் இருக்கிறது, அதில் உணவுக் காளான்கள், விஷ காளான்கள், மருத்துவ காளான்கள் என நாம் தான் பிரித்து அறிய வேண்டும்.உணவுக் காளான்களை எப்படி கண்டறிவது?
காளான் தண்டுப்பகுதியை உடைத்துப் பார்க்கும் பொழுது நார் போன்று வந்தால் அது உணவுக் காளான். அதாவது அவரைக்காயை உடைக்கும் பொழுது வரும் நார் போன்று காளானிலும் வரவேண்டும். தண்டுப் பகுதியில் துளை போன்று இருந்தால் அது விஷக் காளான்.
அத்துடன் காளானை சமைக்கும் பொழுது அதனுடன் சேர்க்கப்படும் வெங்காயம் பொன் நிறத்தில் இருந்தால் அது உணவுக்கு ஏற்ற காளான். வெங்காயம் கருத்துப் போனால் அது விஷக் காளான். சந்தேகத்திற்குரிய காளானாக இருப்பின் காளான் விவசாயிகள் அல்லது அதைச் சார்ந்த நபர்களை கலந்து ஆலோசித்து பயன்படுத்துவது நல்லது.
காளான் உணவால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன.?
காளான் நோய் எதிர்ப்பு சக்தியாகவும், ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் உள்ளது. அதிகளவு புரோட்டின், மற்றும் குறைந்த கலோரிகள் உடையது. சூரிய ஒளியால் கிடைக்கக் கூடிய வைட்டமின் டி-யை காளான் மூலமாகவும் பெற முடியும். எளிதில் ஜீரணமாவதோடு எலும்புகளை வலுப்படுத்துவதற்கும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது. தைராய்டு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும் காளான் மருந்தாகிறது.
காளான் வர்த்தகம் எப்படி உள்ளது.?
ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் செலவு செய்தால் போதும் குறுகிய காலத்தில் காளான் மூலம் லாபம் அடையலாம். மாடித் தோட்டங்கள் வழியாகவும், வீட்டிற்குள்ளும் காளான் வளர்க்கலாம்.
ரூ.20 முதலீடு செய்து ஒரு காளான் உரியை உருவாக்கினால் அதன் மூலம் மாதம் ரூ.250 வருவாய் ஈட்டலாம். ஆரம்பத்தில் இருபதாயிரம் முதலீடு போட்டு தொழில் தொடங்கியவர்கள் தற்போது மாதம் முப்பதாயிரம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
காளான் விவசாயத்தை கூட்டு விவசாயமாகவும் பண்ணலாம், கை தொழிலாகவும் செய்யலாம். முகூர்த்த நாட்களில் திருச்சி, காந்தி மார்க்கெட்டில் காலை ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் காளான் விற்றுத் தீர்ந்து விடுகிறது. மற்ற நாட்களில் காலை 10 மணி வரை வியாபாரம் நடக்கும்.
காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி மற்றும் வர்த்தகம் குறித்து மேலும் தகவல் அறிய கணேஷ் சரவணனை 73739 88787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.