சென்ற 2011—-&2016-ல் தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.2.11 லட்சம் கோடியாக இருந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் மேலும் உயர்ந்து 2021ல் கடன் தொகை ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை வளர்ச்சி 2020—-&-21 கொரோனா காலகட்டமானது கடன் வளர்ச்சியை இருமடங்காக்கி ஒரே ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியை தொடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிதியாண்டில் மேலும் ரூ.84,686 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்ற அதிமுக ஆட்சியின் போது, கடந்த பிப்ரவரி 23ம் தேதி, தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய திமுக, நிதி நிர்வாகத்தில், இனி என்ன செய்யப் போகிறது என பலரையும் எதிர்பார்க்க வைத்தது.
டாஸ்மாக் வருவாயைத் தாண்டி புதிதாக ஏதேனும் வருவாய்க்குரிய திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே கடன் சிக்கலிலிருந்து சமாளித்து தமிழக அரசு மீண்டெழும் என பேசப்பட்டது. வருவாய்க்கு திமுக எடுக்கப் போகும் ஆயுதம் லாட்டரி என்றும் பேசப்பட்டது. ஆனால், அப்படி எந்த திட்டமும் திமுக அரசிடம் இல்லையென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் சொன்னதன் மூலம் அரசிற்கு லாட்டரி வருவாய் கிடையாது என்பது திட்டவட்டமானது.
ஒரு மாநிலத்தின் மொத்த கடன் அளவு அந்த மாநிலத்தின் மொத்த பொருள் உற்பத்தியில் சுமார் 25% வரை இருக்கலாம் என ஆர்.பி.ஐ வரையறை நிர்ணயித்திருக்கிறது.
“2021-ம் ஆண்டு 31 மார்ச் – அன்றைய நிலையில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 24.98 சதவீதமாகவும், 2022-ம் ஆண்டு 31 மார்ச் – அன்றைய நிலையில் 26.69 சதவீதமாகவும் இருக்கும் எனவும் இவை, 15-வது நிதிக்குழுவின் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவையாகவே உள்ளது” என இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது அன்றைய நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
ஆனால், தமிழகத்தின் கடன் அடுத்த ஆண்டு முடிவில் ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும்பட்சத்தில், அது நமது மொத்த உள்நாட்டு பொருள் உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 26.69 சதவிகிதமாக இருக்கும். இது ஆர்.பி.ஐ நிர்ணயித்திருக்கும் அளவைவிட சற்று அதிகம் தான் என்பதே உண்மை நிலை என பொருளாதார நிபுணர்கள் கோடிட்டு காட்டினர்.
என்ன செய்யப் போகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..?
புதிதாக பொறுப்பேற்ற போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மு.க.ஸ்டாலின் கௌரவம் பார்க்காமல், சென்ற அதிமுக ஆட்சியின் போது இருந்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையே திமுக ஆட்சியின் போதும் தொடரச் செய்தார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை குழுவில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் சேர்த்துக் கொண்டார். இவையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பக்குவத்தை வெளிக்காட்டியது.
அதே போல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் உள்ள பொருளாதார நிபுணர்களையும் தாண்டி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட ஐந்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை உருவாக்கினார்.
ஏன் தமிழகத்தில் பொருளாதார நிபுணர்கள் இல்லையா..? பின் ஏன் தமிழ், தமிழர்கள் என வீம்பு பேசுகின்றனர் என எதிர்தரப்பினர் கிண்டல் செய்தனர். அவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை.
ஆட்சி அமைந்த 73வது நாளிலேயே…
முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பொருளாதாரத்தை உயர்த்திட, சரியான நபர்களை தேர்வு செய்ததாலேயே ஆட்சி அமைத்த 73வது நாளில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் ரூ.28,508 கோடி முதலீட்டில் 49 திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்துக்குத் தற்போது தேவை, புதிய பொருளாதார சிந்தனை, கொள்கை, கோட்பாடு. அந்தத் திசையில் மிகச் சரியாக பயணம் மேற்கொள்ள என்னவிதமான பேச்சுக்கள் எதிர் வந்தாலும் அவற்றை பொருட்படுத்துவதில்லை என்பதில் திண்ணமாக இருந்து தனது செயல்களில் கவனம் செலுத்தினார்.
இக்குழுவில் இடம் பெற்ற ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர். அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்டர் டஃப்லோ, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவர். பேராசிரியர் ஜான் த்ரே, இந்தியப் பொருளாதாரம் குறித்து விரிவாக அறிந்தவர். வளர்ச்சிப் பொருளாதாரம், ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் தேர்ந்தவர். டாக்டர் எஸ்.நாராயணன் மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவருக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர். இந்திய அரசின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலராகவும் செயலாற்றியவர்.
ஒரு செயலை செய்ய சரியான நபர்களை தேர்வு செய்தாலே அச்செயல் பாதி வெற்றி அடைந்ததற்கு சமம் என்பதற்கு ஏற்ப முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பொருளாதாரத்தை உயர்த்திட, சரியான நபர்களை தேர்வு செய்ததாலேயே ஆட்சி அமைத்த 73வது நாளில் 83482 நபர்களுக்கு, வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் ரூ.28,508 கோடி முதலீட்டில் 49 திட்டங்களை தொடங்கி வைத்தார்.
“தடையில்லா மின்சாரம், நீர் வளம், மனித வளம், பணியாளர்கள் திறன், இணைய வசதி, போக்குவரத்திற்கான சாலை வசதி, ஏற்றுமதிக்கான துறைமுக வசதி, சரக்கு போக்குவரத்திற்கான விமான சேவை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை ஆராய்ந்தே முதலீட்டாளர்கள் தமிழகம் வருவார்கள். இவையெல்லாம் ஏற்கனவே நம்மிடம் உள்ளது. பின் என்ன..?
பொதுவாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவார்கள். இவ்வளவு முதலீடு என்று அறிவிப்பார்கள். ஆனால் அது நடக்காமலே போய்விடும். அது போன்று நடவாமல் இருக்க சரியான ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும். “ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிப்பவர்களாக உள்ளனர் ஐவர் குழுவினர். இவர்கள் அனைவரும், உலக அளவில் உள்ள பல்வேறு நிதி அமைப்புகளோடும், தொழிலபதிபர்களோடும், அறக்கட்டளைகளோடும் தொடர்பு உடையவர்கள். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களைத் தேடிப் போகும் போது, இவர்கள் மீதான நன்மதிப்பே நம்மை கைது தூக்கி விடும்” என்கின்றனர் பொருளாதாரத்துறை நிபுணர்கள்.
எத்தனை தடை வந்தாலும்….
தமிழகத்துக்குத் தற்போது தேவை, புதிய பொருளாதார சிந்தனை, கொள்கை, கோட்பாடு. அந்தத் திசையில் மிகச் சரியாக பயணம் மேற்கொள்ள என்னவிதமான பேச்சுக்கள் எதிர் வந்தாலும் அவற்றை பொருட்படுத்துவதில்லை என்பதில் திண்ணமாக இருந்து தனது செயல்களில் கவனம் செலுத்தினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட பிறகு, அதில் குறிப்பிட்டபடி தொழிற்சாலை அமைக்கும் பணி நடப்பதைக் கண்காணிப்பதோடு, 24 மணி நேரமும் செயல்படும் இண்டஸ்ட்ரியல் ஹெல்ப் லைன் ஒன்றையும் அமைத்துள்ளது தமிழக அரசு.
சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தெற்கு ஆசியாவில் தொழில்புரிய உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே எங்கள் லட்சியம். முதலீட்டாளர்கள் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, திட்டத்தை விரைவாக நிறுவ, மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-வைத் தொடங்கியுள்ளேன். இதில் கூடுதலாக 210 சேவைகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சேர்க்கத் திட்டமிட்டு உள்ளோம். புதிய முதலீடுகளைப் பெருமளவு ஈர்க்க வேண்டும் என்பதற்காக, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்நிகழ்ச்சி குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் முதலீடு செய்து, செயல்படும் புத்தொழில் நிறுவனங்களை(Start ups) ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் (ATEA) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த Digital Accelarator திட்டம் மூலம், தமிழகத்தில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகப் புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல் கட்டமாக 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அதற்கான அனுமதி உத்தரவுகளை, முதல்வர் வழங்கியுள்ளார்” என்றும், “உயர்தர உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான இயந்திர பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, General Electric நிறுவனம் ஒரு திறன்மிகு மையம் (Centre of Excellence)அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் டிட்கோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது” என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது.
“பண்பாட்டின் முகவரியாக இருக்கும் தமிழ்நாடு, தற்போது முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற தமிழக அரசு உழைத்து வருகிறது. கொரோனா காலத்தை, கொரோனாவை வென்ற காலமாக தமிழக அரசு மாற்றி வருகிறது. தொழிலை வர்த்தகமாகக் கருதாமல் சேவையாக எண்ணி முதலீட்டாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கை கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். தெற்காசியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே எனது தலைமையிலான அரசின் இலக்கு” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். பெரும் நம்பிக்கைக்குரிய பாதையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.