சுய விளம்பரம் அவசியம் தானா?
‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் ஒரு காமெடி வரும். திருவிழாவில் டான்ஸ் ஆடும் போது செந்தில், தன்னையும் கோவை சரளாவையும் இணைத்து புகழ்வதற்கு பத்து ரூபாய் கொடுத்து ஒரு ஆளை செட்டப் செய்திருப்பார். இதையறிந்த கவுண்டமணி, ‘நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் தேவையா உனக்கிந்த விளம்பரம்” என திட்டுவார். படத்தில் நீங்கள் பார்க்கும் காமெடி சிரிப்பதோடு முடிந்துவிடும். ஆனால் நிஜத்தில், அதுவும் இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் திறமையுடன், உங்களை நீங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
பொதுவாக நீங்கள் திறமைமிக்கவர் என கூறுவதால் எந்த பயனும் இல்லை. நீங்கள் எதில் ஸ்பெஷலிஸ்ட் என்பதை வெளிக்காட்ட வேண்டும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்தெந்த நேரத்தில் நீங்கள் கொடுத்த ஆலோசனையை நிறுவனம் ஏற்று அதை அமல்படுத்தி பலன் அடைந்தது என்பதை அப்போதைக்கு அப்போது சக ஊழியர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டும். இல்லையெனில் மற்றவர்கள் அதன் பலனை தட்டிச் சென்று விடுவர்.
தமிழ் சினிமாவால் ஏன் ஆஸ்கர் வாங்க முடியவில்லை என்பதற்கு கமல் சொன்ன பதில் ‘லாபி பண்ணுவது”. அதாவது தேர்வுக் குழுவினரிடம் ஒரு குறிப்பிட்ட படம் குறித்து அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் லாபி செய்வது. அது ஆங்கில பட தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது. ஆனால் நம்மால் அது போல் முடியவில்லை என்று கூறியிருப்பார். உள்ளுர் பாஷையில் சொல்வதென்றால், “தம்பட்டம் அடிப்பது”. நீங்கள் உங்களைப் பற்றி அவ்வப்போது தம்பட்டம் அடித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். சுயவிளம்பரத்தை தற்பெருமை என்று கூறி ஒதுக்கிவிடாதீர்கள்.
கஜினி படத்தில் சூர்யா ஒரு வசனம் பேசியிருப்பார். தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்கும் ஒரு நூலிலை வித்தியாசம் தான். தன்னம்பிக்கை என்பது, என்னால் முடியும். தலைக்கனம் என்பது, என்னால் மட்டுமே முடியும் என்று கூறுவது. எனவே சுயவிளம்பரத்தின் போது ஆணவம் கூடாது என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.