மார்க்கெட்டிங் ஆலோசகர் அவசியமா?
புதிதாக ஒரு பொருளை சந்தையில் களமிறக்கத் தயாராகிவிட்டார்கள். நீங்கள் சந்தையில் இறக்கும் பொருட்கள் புதிதா அல்லது ஏற்கனவே பலரும் விற்பனை செய்யும் பொருளா என்பதை கணக்கில் கொண்டு மார்க்கெட்டிங் ஆலோசகரின் தேவை பற்றிய ஒரு புரிதலை கொள்ள வேண்டும்..!
ஏற்கனவே சந்தையில் உள்ள பொருளை போன்றதொரு புதிய பொருளை புதிய பெயரில், உதாராணமாக சமையல் எண்ணெய் விற்கலாம் என்று முடிவெடுத்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஏற்கனவே மார்க்கெட்டில் கோல்டுவின்னர், இதயம் உள்ளிட்ட ஏராளமானோர் சந்தையை கைப்பற்றி உள்ளார்கள். பல கோடி விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்திருப்பார்கள். எண்ணெய் என்றால் அந்த முன்னணி பிராண்டு பெயர் சொல்லி தான் வாங்குவோர்கள். இப்படியான சூழலில் உங்களின் பொருளை மார்க்கெட் செய்வது எப்படி என்பதை மார்க்கெட் சர்வே மூலம் அறிவது அவசியம். அதற்கு மார்கெட் ஆலோசகர் அவசியம். ஆலோசகர் என்பவர் அனுபவம் கொண்டவரால் மட்டுமே இருக்க முடியும். அவரே மார்கெட் சர்வேயினை சரியாக செய்து தர முடியும்.
சர்வே மீதான ஆலோசனை கூட்டம், கலந்துரையாடல்கள் மூலமே உங்கள் பொருளை சந்தைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன, விலை நிர்ணம், தர ஒப்பீடு, யார் வாடிக்கையாளர், அவர்களை சென்றடைய எப்படியெல்லாம் விளம்பரம் செய்ய வேண்டும். எந்தெந்த மீடியம்களை விளம்பரத்திற்கு பயன்படுத்த வேண்டும். அதற்கான பட்ஜெட் என பல விஷயங்களை ஆய்ந்து அரிய முடியும். மார்க்கெட்டிங் செலவு என்பது செலவல்ல முதலீடு என்பதை உணருங்கள். அது வீண் செலவு என்று யாராவது சொன்னால் அவர்களை உங்கள் அருகாமையில் சேர்க்காதீர்கள். மார்க்கெட்டிங் தத்துவங்களை உணர்ந்தவர்களை பணியில் அமர்த்துவது உங்களுக்கு நல்லது. உங்கள் தொழிலுக்கு உகந்தது. மார்க்கெட்டிங் என்பது முதலீடென்றால் மற்றொரு பக்கம் அது ஒரு ஆயுள் காப்பீடு. டிஃபென்ஸ் பட்ஜெட். உங்கள் இடத்தை தக்கவைக்க நீங்கள் செய்யும் செயல்களின் ஒரு அங்கம் மார்க்கெட்டிங்.
நீங்கள் மார்க்கெட்டிங் செய்வதை நிறுத்தினால் நாளடைவில் வாடிக்கையாளர் கண்ணிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குவீர்கள். நீங்கள் விழுந்து எழுந்து சுதாரித்து பார்ப்பதற்குள் வேறொருவர் அந்த இடத்தைப் பிடித்திருப்பார். நீங்கள் விட்ட இடத்தைப் பிடிக்க முன்பை விட இரண்டு மடங்கு முனைப்பு காட்ட வேண்டும். தேவையா இந்த விபரீதம்.