உரிமை பங்கு வெளியிடும் எல்&டி பைனான்ஸ்
பொது பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் தங்களது மூலதனங்களை அதிகரிப்பதற்காக மேலும் பங்குகளை வெளியிட விரும்பினால், அந்நிறுவனம் அப்போதைய பங்குதாரர்களுக்கு, அவரவர்கள் பங்கு வைத்திருக்கும் விகிதாசாரப்படி, அவர்களுக்கு மட்டுமே பங்குகளை வெளியீடு செய்வதே உரிமை பங்குகள் என கூறப்படும். அதாவது ஏற்கனவே அந்நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர்கள மட்டுமே புதிய வெளியீட்டு பங்குகளை பெற உரிமை உள்ளது.
அதன்படி பொறியியல் உள்கட்டமைப்பு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கிடும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின், நிதி பிரிவான எல் & டி பைனான்ஸ், பிப்ரவரி 1 முதல் உரிமை பங்கு வெளியிட்டுள்ளது. அதன் மூலம் ரூ.2,998.61 கோடி நிதி திரட்ட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக 461.33 மில்லியன் ஈக்விட்டி பங்குகளையும் வெளியிட்டு உள்ளது. ஒரு ஈக்விட்டி பங்கின் விலையானது ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பங்குதாரர்களுக்கு ப்ரீமியம் விலை ரூ.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பங்குதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
மேலும் எல்&டி பைனான்ஸில் ஈக்விட்டி பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 74 பங்குகளுக்கும், 17 பங்குகள் என்ற விகிதாரச்சத்தில் இந்த பங்குகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நிறுவனம் அறிவிப்பு கொடுத்த 15 நாட்களுக்குள், அதாவது வருகிற பிப்ரவரி 15ம் தேதிக்குள் பங்குதாரர்கள் தங்களது விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும். ஒரு வேளை பங்குதாரர்களுக்கு இந்த பங்குகளை வாங்க விருப்பம் இல்லை எனும் பட்சத்தில், பொது மக்களுக்கு வெளியிடலாம். இந்த பங்கு வெளியீடு பிப்ரவரி 15ம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.