வீடு, நிலம் வாங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்..
வீடு அல்லது நிலம் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு பத்திரம் பதிந்த பின், உடனே பட்டாவும் சேர்த்து வாங்கி விடுங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கியது குடும்ப பாகப்பிரிவினை மூலம் வந்த வீடு அல்லது நிலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
அந்த சொத்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா..? என்பதை அவசியம் கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதியதாக சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குபவர் அவரது பெயருக்கு பெயர் மாற்றம் செய்வது எளிதாக இருக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள்.
பழைய பட்டா காரணமாகவே பலர் சிக்கலை சந்திக்கிறாரக்ள் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும். அப்படியான சூழலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில்தான் பழைய பட்டா இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்களை வாங்குவது பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
சிக்கல் வரும்
அவ்வாறு குறிப்பிட்ட வீடு அல்லது மனை வாங்கப்பட்டிருந்தாலும், பட்டா விஷயத்தில் எவ்விதமான கால தாமதமும் கூடாது. காரணம், சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிடும் பட்சத்தில் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது சிரமமானதாகி விடும். அதன் பிறகு, இறந்தவரது வாரிசுகள் இருப்பின் அவர்களது உதவி தேவைப்படும் நிலையில், பெயர் மாற்றம் செய்வது சிக்கலான விஷயமாகி விடும். ஆகவே பாகப்பரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்கு உரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு, பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது சுலபமாகி விடும்.
பட்டா அவசியம் ஏன்
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் இடத்திற்கு உடனே ஆன்லைன் பட்டா வாங்கிவிடுங்கள்.
ஏனெனில் சிலர் தவறுதலாகவோ; அல்லது வேண்டுமென்றோ அடுத்தவர் நிலங்களையும் பட்டா போடுவது, பத்திரம் போடுவது நடந்து நடக்கிறது. எனவே உங்கள் நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்களை அவ்வப்போது சரிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் டவுன்லோடு செய்தும் வைத்துக் கொள்வது நல்லது.