ஓய்வுக்காலத்தில் அதிக பென்ஷன் பெற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே சிறந்தது
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள முக்கியமான வசதி Systematic Withdrawal Plan எனப்படும் எஸ்.டபிள்யூ.பி (SWP). அதாவது, குறிப்பிட்ட இடைவெளியில் பணத்தைத் திரும்ப எடுப்பது. ஓய்வுக்காலத்தில் அதிகம் பயன்படும் இத்திட்டம் குறித்து பார்ப்போம்.
சம்பாதிக்கும் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சீரான முதலீட்டுத் திட்ட (Systematic Investment Plan – SIP) முறையைப் பயன்படுத்தித் தொகுப்பு நிதியை முதலில் சேர்க்க வேண்டும். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது முதலீட்டுக் காலம் மற்றும் முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீடு…
முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டு களுக்குக் குறைவாக இருக்கிறது எனில், கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்யலாம். ஆனால், முதலீட்டில் கொஞ்சம்கூட ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில், கடன் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற் கொள்ளலாம். இந்த முதலீடுகளின் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 6.5% -& 7.75% வருமானம் கிடைக்கும். முதலீடு செய்யும் தொகை அதிகமாக இருந்தால்தான், பணி ஓய்வுக்கால செலவுகளை சிக்கல் இல்லாமல் செய்ய முடியும்.
ஈக்விட்டி ஃபண்ட்…
முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை எஸ்.ஐ.பி முறையில் மேற்கொண்டு வரலாம். இதிலும் பல வகையான ஃபண்டுகள் இருக்கின்றன. அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள் மல்ட்டி கேப் ஃபண்டுகள், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள், லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மிதமான வருமானம் எதிர்பார்ப்ப வர்கள் லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகளைத் தாண்டியிருக்கும்பட்சத்தில், ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப், மல்ட்டிகேப் ஃபண்ட், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளில் முதலீட்டைப் பிரித்து எஸ்.ஐ.பி முறையில் மேற்கொண்டு வரலாம்.
ஹைபிரிட் ஃபண்ட்…
அடுத்து, முதலீட்டில் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கக் கூடியவர் எனில், அவர் கடன் சந்தை மற்றும் பங்குச் சந்தையில் கலந்து முதலீடு செய்யும் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். மொத்த முதலீடு என்கிறபோது மொத்தத் தொகையை ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்ட் ஒன்றில் போட்டு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள ஹைபிரிட் ஃபண்டுக்கு முதலீட்டை முறையான பரிமாற்ற திட்ட (Systematic transferplan-STP) முறை மூலம் மாற்றுவது ரிஸ்க்கைக் குறைக்கும்.முதலீட்டுக் காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்கும் பட்சத்தில்தான் இந்த ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். தவிர, அஸெட் அலொகேட்டர் ஃபண்ட் மற்றும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டு களிலும் இவர்கள் முதலீடு செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பென்ஷன்…
முதலீடு செய்து சேர்த்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் தொகுப்பு நிதி மூலம் பென்ஷன் பெற முடியும். . ஓர் உதாரணம் மூலம் சொன்னால் எளிதில் புரியும். 28 வயதான ஜான் என்பவர் தன் பணி ஓய்வுக்காலத்துக்காக ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வருகிறார். அவரின் 55 வயது வரை 27 ஆண்டுகள் தொடர்ந்து இடை விடாது முதலீடு செய்து வருகிறார். இந்த முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம்.
இவருக்கு அவரின் 56-வது வயதில் ரூ.2,16,23,130 தொகுப்பு நிதி சேர்ந்திருக்கும். இந்தத் தொகையை அவர் ரிஸ்க் இல்லாத கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார். அதன் மூலம் ஆண்டுக்கு 6% வருமானம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த நிலையில், ரூ.1,08,115-ஐ இவர் மாதம்தோறும் திரும்ப எடுத்து செலவு செய்யலாம்.