இன்சூரன்ஸ் எடுக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்
டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் அதனை தவிர்க்கும் முறைகள் குறித்து அறிவோம்…
டெர்ம் இன்சூரன்ஸ் என்பது, பாலிசிதாரர் குடும்பத்தின் எதிர்காலத்தை காக்க உதவுகிறது. இது முற்றிலும் எதிர்கால பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுமோ தவிர, முதலீடாக திரும்பக் கிடைக்காது. அதாவது பாலிசிதாரர் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி செய்துள்ளார் என வைத்துக்கொள்ளவோம், அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் இறந்துவிட்டால் இன்சூரன்ஸ் தொகையானது. நாமினியாக குறிப்பிட்டுள்ள நபர் அல்லது குடும்பத்தினருக்குச் சென்று சேரும். பாலிசிதாரர் இறந்த பின்னர், அவரது குடும்பத்திற்கான வருமானமாகவும், பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற எதிர்கால பிரச்சனைகளை தீர்க்கவும் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி கைகொடுக்கும்.
முன்மொழிவு படிவத்தை நீங்களே நிரப்புங்கள் :
இன்சூரன்ஸ் படிவத்தை நிரப்ப உறவினரையோ, நண்பரையோ அல்லது இன்சூரன்ஸ் முகவரையோ பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் உங்கள் இன்சூரன்ஸ் படிவத்தை நீங்களே நிரப்பினால் தான் அத்திட்டம் பற்றி முழு விவரங்களையும் அறிய முடியும். எனவே, உங்கள் காப்பீடு திட்டத்தின் முன்மொழிவு படிவத்தைக் கண்டிப்பாக நீங்கள் மட்டுமே நிரப்ப வேண்டும். இது நீங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கொள்கை விவரங்களை அறிந்து கொள்ளவும், பாலிசி ஆவணங்களை சரி பார்க்கவும், க்ளைம் அமெண்ட் பற்றி தெரிந்து கொள்ளவும் உதவும்.
அதிக க்ளைம் செட்டில்மெண்ட் உள்ள நிறுவனம் :
அதிக முறை க்ளைம் செய்யக்கூடிய வசதியைக் கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பாலிசிதாரர் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும். அதேசமயம் குறைந்த முறை க்ளைம் செய்தாலும் அதிக அளவில் பாலிசித் தொகையை வழங்கக்கூடிய இன்சூரன்ஸ் நிறுவனங்களும் உள்ளன. அதாவது க்ளைம் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாக கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு பதிலாக, குறைந்த முறை க்ளைம் செய்தாலே அதிக தொகையை வழங்கக்கூடிய காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கலாம்.
கவரேஜ் தொகை :
பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினரின் எதிர்காலத்தை பாதுகாக்கவே டெர்ம் இன்சூரன்ஸ் பயன்படுகிறது. எனவே குடும்பத்தின் நிதித்தேவையை அறிந்து கொண்டு பாலிசிக்கான முதிர்வுத் தொகையை திட்டமிட வேண்டும். நிதிச் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கு வெவ்வேறு விதமான தேவைகள் இருக்கும். திரும்ப செலுத்த வேண்டிய கடன்கள், குறுகிய கால செலவுகள், பிள்ளைகளின் படிப்பு மற்றும் கல்யாணத்திற்கு தேவையான தொகை ஆகியவற்றையும், சேமிப்பு, ஃபிக்சட் டெபாசிட், பிஎஃப் உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு டெர்ம் இன்சூரன்ஸ் தொகையை தீர்மானிக்க வேண்டும். பொருளாதார நிபுணர்களின் கணிப்புப்படி ஆண்டு வருமானத்தில் 20 மடங்கு பணத்தை காப்பீட்டுத் தொகையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
க்ளைம் பே-அவுட் ஆப்ஷன் :
டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கில் சில லட்சங்கள் அல்லது கோடிக்கணக்கான பணம் கூட க்ளைம் தொகையாக கிடைக்கலாம். அப்படி ஒரே சமயத்தில் கிடைத்த அதிகமான தொகையை என்ன செய்வது என தெரியாமல், குடும்பத்தினர் தவறு முதலீடுகள் மற்றும் செலவினங்களில் பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது. எனவே டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் போதே க்ளைம் பே-அவுட் ஆப்ஷனையும் முன்கூட்டியே தேர்வு செய்வது நல்லது. பெரிய தொகையை ஒரே நேரத்தில் கையாளக்கூடிய திறமை உங்கள் குடும்பத்தினரிடம் இல்லை என்றால், லம்ப்சம் பே அவுட், மாதாந்திர வருமானம் பே-அவுட் லம்ப்சம் + மாதாந்திர வருமானம் பே-அவுட் போன்ற க்ளைம் பே-அவுட் விருப்பங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
ரைடரைக் குறிப்பிட மறக்காதீர்கள் :
டெர்ம் இன்சூரஸில் ரைடர் என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கான கூடுதல் தொகையை பெற உதவும் ஆப்ஷனாகும். அதாவது பாலிசிதாரருக்கு மோசமான நோய் இருந்தால் அவரது மரணத்திற்கு பிறகு, அதற்காக கூடுதல் க்ளைம் தொகை கிடைக்கும். டிஸ்ஏபிலிட்டி, கிரிட்டிகல் நோய், ஆக்சிடென்டல் டெத்போன்ற பல வகையான ரைடர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக பல மாதங்கள் அல்லது வருட தாமதத்திற்கு பிறகு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் நபர்கள், தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட ரைடரை தேர்ந்தெடுப்பது, குடும்பத்திற்கான இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க உதவும்.