திருச்சியில் கலக்கும்
தந்தூரி டீ..!
திருச்சி, கல்லுகுழியில் உள்ளது தந்தூரி ச்சாய் எனும் டீக்கடை. தந்தூரி சிக்கன் தான் கேள்விபட்டிகிறோம். இது என்ன தந்தூரி டீ. வழக்கமாக தயாரிக்கப்படும் டீயில் கொஞ்சம் புதினா, ஏலக்காய் சேர்க்கிறார்கள். மண் குடுவையினை ஒரு நெருப்பு தணலில் சுட வைக்கிறார்கள்.
கொதித்திருக்கும் அந்த மண்குடுவையில் டீயை ஊற்றுகிறார்கள். ஒரு சில நொடிகளில் அந்த டீ பொங்கி வழிகிறது. அதை வடிகட்டி வழியாக பீங்கான் கோப்பையில் ஊற்றி தருகிறார்கள். இது தான் தந்தூரி டீ. சுடு மண் சுவையுடன் கலந்திருக்கும் அந்த டீ ஒரு புதிய சுவை அனுபவத்தை தருகிறது. ஒருவர் பி.காம் பட்டதாரி. இருவர் இன்ஜினியரிங் படித்தவர்கள். மூவரும் இணைந்து இந்த தந்தூரி ச்சாய் கடையை தொடங்கியிருக்கிறார்கள்.
கடையின் பங்குதாரர்களில் ஒருவரான கே.பிரசாந்த் தந்தூரி ச்சாய் கடை பற்றி நம்மிடம் கூறுகையில், தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தேன். தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது தான் எனது நண்பர் ஒருவர் இந்த தந்தூரி டீயை அறிமுகப்படுத்தினார். டீ வித்தியாசமான சுவையில் இருந்தது. டீ பிரியிர்கள் நல்ல டீ எங்கு கிடைத்தாலும் தேடிச் சென்று குடிப்பார்கள்.
எனவே நான் எனது நண்பர்கள் டி.சுகன், டி.மனோஜ் இருவருடன் இணைந்து தந்தூரி டீக்கடை அமைத்தோம். கடந்த ஜனவரி மாதமே இங்கு கடை அமைக்க திட்டமிட்டோம். இரண்டு மாதம் தள்ளிப் போக பின்னர் கொரோனா ஊரடங்கு. ஒன்றரை மாதம் முன்பு தான் கடையை தொடங்கினோம். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தந்தூரி டீயானது புதிய சுவையோடு நுரையீரலை சுத்தப்படுத்தும். எனவே சிகரெட் பிடிப்பவர்களுக்கு இந்த டீ தேறுதலை தரும்” என்றார்.
ச்சாய் கடையில் தந்தூரி டீ மட்டுமின்றி சேலம் தட்டு வடை, கரூர் கார பொறி, குல்கி சர்பத் என பல அயிட்டங்களை போட்டு அசத்துகிறார்கள்.