பணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’
மாத வருமான திட்டம் என்று அழைக்கப்படும் ஹைப்ரிட் பிளான் இந்தியாவில் அதிகளவில் பிரபலமாகவில்லை எனினும், இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் நிதி அனைத்தும் நிதி நிறுவனங்களிலும், வங்கி நிறுவனங்களிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மாத வருமானமாக வழங்கப்படுகிறது. மாத வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். அவ்வாறு வருமானம் தரும் சில நிறுவனங்களை அறிவோம்.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது மாத வருமான திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 23 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்நிறுவனம், வசூலிக்கும் தொகையை அரசு பத்திரங்களில் முதலீடு செய்து வருகிறது.
வாடிக்கையாளர்களுக்கு சென்ற வருடம் பிராங்க்ளின் இந்தியா நிறுவனம் 22 சதவீத வருமானத்தையும், ஸ்டேட் பேங் ஆப் இந்தியா, எஸ்பிஐ மேக்னம் என்ற பெயரில் 17 சதவீத வருமானத்தையும், பிர்லா சன் லைப் நிறுவனம் 19 சதவீத வருமானத்தையும், கனரா வங்கி தனது மாத வருமான திட்டத்தை கனரா ரோபிகோ என்ற பெயரில் 20 சதவீத வருமானத்தையும், ஐடிஎஃப்சி நிறுவனம் 20 சதவீத வருமானத்தையும் அளித்துள்ளது, பொதுவாக அஞ்சலகங்களிலும், வங்கிகளிலும் செய்யப்படும் முதலீட்டிற்கு 8 முதல் 9 சதவீத வட்டி கிடைக்கிறது. மேற்சொன்ன திட்டங்களில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் 20 சதவீதம் வருமானம் வரும். எனினும் இந்த வருமானம் நிச்சயம் என்று சொல்ல முடியாது.