PACL வீழ்ந்த வரலாறு… பணம் திரும்ப கிடைக்குமா..மினி தொடர் 5…!
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை… முதலீட்டாளர்களை காப்பாற்றுகிறதா செபி?
பிஏசிஎல் நிறுவனத்தால் ஏமாந்த முதலீட்டாளர் களுக்கு பணத்தை திருப்பித் தர உள்ள ஒரே வாய்ப்பு அதன் சொத்துக்களை விற்பது தான் என முடிவெடுத்த உச்சநீதிமன்றம் நீதிபதி ஆர்.எம்.லோதா (ஓய்வு) தலைமையில் கமிட்டி ஒன்று அமைத்து இப்பணிகளை செய்யப் பணித்தது. அதன்படி, ஒரு கமிட்டியை செபி (இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம்) அமைத்தது.
முதற்கட்டமாக லோதா கமிட்டியானது பிஏசிஎல் நிறுவனத்தின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்யும் பணியில் இறங்கியது. சுமார் 23 வங்கிகளில் இருந்து ஏராளமான டெபாசிட் தொகைகளை கையகப்படுத்தியது. 8 வங்கிகளிலிருந்து மட்டும் ரூ.4,93,62,287 பணத்தை கையகப்படுத்தியது.
இதோடு மட்டுமின்றி பிஏசிஎல் நிறுவனத்தின் மூலம் 25 துணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.113.45 கோடியும், சிஸ்டமடிக் டிரஸ்ட் கணக்கி லிருந்து ரூ.16,86,98,766 பணத்தையும் செபியின் லோதா கமிட்டி கையகப்படுத்தியது.
மேலும் கோவாவில் சண்டிகார், சிராக்பூர், கோல்வா மற்றும் கலங்கூட் கடற்கரையில் உள்ள ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்காக பிஏசிஎல் லிமிடெட் குத்தகைக்கு வழங்கிய சொத்துக்களின் ஆவணங்களை லோதா குழு கைப்பற்றி, ஆவணங்களில் உள்ள விபரங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.
அதில் இந்தியாவில் உள்ள டேடக் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்திற்கு குத்த கைக்கு வழங்கப்பட்டது தெரிய வந்தது. அதில் வாடகை பணம் ரூ.72,37,393 செலுத்தாமல் தாமதப்படுத்தியது கண்டறியப்பட்டது. அத்துடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தாராம்பூர், உத்திரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா மற்றும் ஹரியானாவின் கர்ணால் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.ஹோட்டல் என குத்தகைக்கு கொடுக்கப்பட்ட சில ஹோட்டல்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் நிறுவன சொத்துக்களையும் பறிமுதல் செய்து, விற்று, அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரும் முயற்சியில் செபி இறங்கியது.
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஆஸ்திரேலிய ஃபெடரல் நீதிமன்றத்தில் செபி கோரிக்கை விடுத்தது. அதில், பிஏசிஎல் என்ற இந்திய நிறுவனம் செய்த மோசடிகளை குறிப்பிட்டு, பிஏசிஎல் சொத்துகளை விற்கும் முடிவை இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதால், அதனடிப்படையில் அந்நிறுவனத்தின் பெயரில், ஆஸ்திரேலியாவில் உள்ள சொத்துக்களை விற்க அனுமதி கோரியது. இக்கோரிக்கையை பரிசீலித்த ஆஸ்திரேலிய ஃபெடரல் நீதிமன்றம் ஆஸ்திரேலியாவில் உள்ள பிஏசிஎல் சொத்துக் களை விற்க அனுமதி அளித்தது.
அதன்படி ஆஸ்திரேலியாவில் ரூ.523,14,20,000 மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரூ.889,34,14,000 மதிப்பு கொண்ட ஷெரட்டன் மிரேஜ் ஹோட்டல் சொத்துக்களை செபி கையகப்படுத்தியது. இப்படி பிஏசிஎல் நிறுவனத்திற்கு சொந்த மான கோடிக்கணக்கான சொத்துக்களை, ஆவணங்களை கைப்பற்றும் வேலையை சரியாக செய்த செபியால் அமைக்கப்பட்ட லோதா கமிட்டியானது முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துவதற்கான வேலையை மட்டும் சரிவர செய்யவில்லை. பல நேரங்களில் செபியின் நடவடிக்கைகள் மூடு மந்திரமாக உள்ளது என்றும், பல விபரங்களை செபி முதலீட்டாளர்களிடம் இருந்து மறைக்கிறது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
மேலும், ஆஸ்திரேலிய அரசு பிஏசிஎல் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட்ட பின்னரும் செபி முதலீட்டா ளர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதற்கான வேலையை செய்யவில்லை என்பது பலரையும் செபியின் மீதான நம்பகத் தன்மையை இழக்க வைத்தது. பிஏசிஎல் நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடு இருமடங்காகும் என்று நம்பியே பெரும்பாலானோர் முதலீடு செய்தனர். முதலீடு செய்தவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர். ஆனால் இருமடங்காக எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்த பணமாவது திரும்பி வருமா என்ற அச்சம் எழத் தொடங்கியது. காரணம் செபியின் நடவடிக்கை அத்தகையதாக அமைந்தது.
2016ல் பிரச்சனை தொடங்கியதிலிருந்து பிஏசிஎல் நிறுவனத்தில் தாங்கள் செய்த முதலீடு திரும்ப வரும் என சுமார் நான்காண்டுகள் காத்திருந்தும் பணம் கிடைக்காமல் போனதால் முதலீட்டாளர்கள் பலரும் நம்பிக்கை இழந்து நிறுவனத்தின் மீதும் செபியின் மீதும் ஆத்திரம் கொள்ளத் தொடங்கினர்.
பிஏசிஎல் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களுக்கான விடிவாக செபியை முழுதாக நம்பினர். ஆனால் செபியும் அவர்களை ஏமாற்றுவதாக உணரத் தொடங்கினர். செபி குழுவினர் யாருக்காக வேலை செய்கிறார்கள்.. பிஏசிஎல் நிறுவன உரிமையாளர்களை காப்பாற்றவா அல்லது முதலீட்டாளர்களை காப்பாற்றவா என கேள்வி எழுப்பத் தொடங்கினார்.
தொடரும்…