PACL வீழ்ந்த வரலாறு..! பணம் திரும்ப கிடைக்குமா.. தொடர்.. 1
உலகப் பொருளாதாரமே சரிந்த காலத்தில், ஒவ்வொரு நாடும் சீர்குலைந்த பொருளாதாரத்திலிருந்து தற்காலத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
நம் இந்திய மக்களின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குணம் தான் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பெரும் உதவியாக இருந்ததாக கூறப்படுவதுண்டு. அத்தகைய காலத்தில் மக்களின் சேமிப்பு பணத்தை கபளீகரம் செய்து தங்களை வளர்த்துக் கொள்ள ஏராளமான பொருளாதார மோசடி நிபுணர்கள் களமிறங்கினர்.
வங்கியில் உங்கள் சேமிப்பிற்கு குறைந்த வட்டியே தருகின்றன. எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் உங்களது முதுமை காலத்தை நாங்கள் கட்டித் தரும் பசுமை எழில் சூழ்ந்த பண்ணை வீட்டில் கழிக்கலாம். உங்கள் பெயரிலேயே அந்த பண்ணை வீடு பராமரிக்கப்படும். அதிலிருந்து வரும் வருமானம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் விரும்பினால் அன்றைய மார்கெட் விலைக்கு பண்ணை வீடு விற்கப்பட்டு உங்கள் கணக்கில் விற்ற பணம் வரவு வைக்கப்படும்.
ஆடு தங்கமும் ஒன்று. தவறாமல் முதலீடு செய்யுங்கள் இன்று. ஆடு வளர்ப்பில் முதலீடு செய்யுங்கள். ஈமு கோழியில் முதலீடு செய்யுங்கள். உங்கள் சேமிப்பிற்கான வட்டி 35 சதவீதமாக இருக்கும் என்றெல்லாம் படம் வரைந்து காண்பிப்பார்கள். இப்படியான காலகட்டத்தில் இந்திய அளவிலான முதல் தலைமுறை டுபாக்கூர் நிறுவனங்களில் ஒன்று தான் பி.ஏ.சி.எல். என்ற நிறுவனமாகும். ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் அங்கீகாரத்தோடு பிப்ரவரி 13, 1996 அன்று நிறுவனங்களின் சட்டம் 1956-ன் கீழ், ஜெய்ப்பூர் பதிவாளர் நிறுவனங்களின் கீழ் பி.ஏ.சி.எல். (பெர்ல் அக்ரோடெக் கார்ப்பரேஷன் லிமிடெட் – PEARL AGRO TECH CORPORATION LIMITED) என்ற நிதி நிறுவனம் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. நொய்டா, ஜிராக்பூர், தில்லி, மும்பை, பட்டிண்டா, வதோதரா, மொஹாலி, மதுரை மற்றும் பல பகுதிகளிலிருந்தும் மதிப்புமிக்க கட்டுமானத் திட்டங்களில் பி.ஏ.சி.எல். ஈடுபட்டது. கட்டுமானத் திட்டங்களோடு மட்டுமல்லாமல் பல விவசாய திட்டங்களிலும் பி.ஏ.சி.எல். நிறுவனம் முதலீடு செய்தது.
குறைந்த தொகைக்கு வீட்டுமனை வழங்குவதாகச் சொல்லி நிதி திரட்டியது. நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்து பலரும் இந்தத் திட்டத்தில் மாதம்தோறும் பணம் கட்டி வந்தார்கள். பொதுமக்கள் தங்கள் சேமிப்பை பாதுகாப்பான முறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணினர். பி.ஏ.சி.எல். நிறுவனம் மக்களிடம், தாங்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். எங்களிடம் நீங்கள் செய்யும் முதலீடு மிகச் சிறந்த முதலீடாகும் என்று உத்தரவாதம் அளித்தது. அவர்கள் உத்தரவாதத்தை நம்பி இந்தியா முழுக்க உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்நிறுவனத்தில் பணத்தைப் முதலீடு செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் தங்களது சேமிப்பு பணத்தை வாரி வழங்கியிருக்கின்றனர்.
பெரும்பாலான பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள் இந்திய கிராமப்புற பகுதிகள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். அத்தியாவசிய செலவு போக தங்கள் கையில் இருக்கும் பணம் வீணாகக் கூடாதென பிள்ளைகளின் மேற்படிப்பு, பெண்ணிற்கு திருமணச் செலவு, புதிய வீடு கட்டுத் திட்டம் என பல்வேறு கனவுகளுடன் பி.ஏ.சி.எல். நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
பி.ஏ.சி.எல். நிறுவனம், பல கிரிக்கெட் வீரர்கள், அரசியல் வாதிகள் சமூகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீவ் ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்டது. பிஏசிஎல் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரபலங்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தியதன் மூலம் முகவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அதாவது அவர்கள் முழுமையாக நம்ப வைக்கப்பட்டனர் என்றே சொல்லலாம்.
ஒருபுறம் முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்புப் பணம், மற்றொரு புறம் முகவர்களுக்கு நல்ல வருவாயுடன் கூடிய வேலைவாய்ப்பு என்றளவிலேயே பி.ஏ.சி.எல். நிறுவனத்தின் வளர்ச்சி பார்க்கப்பட்டது. 15 ஆண்டுகளில் பிஏசிஎல் மற்றும் பியர்ல்ஸ் கோல்டன் ஃபாரஸ்ட் லிமிடெட் (பி.ஜி.எஃப்.எல்) ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.49,100 கோடி சேகரிக்கப்பட்டன. முதலீட்டாளர்களின் எண்ணிக்கையோ 6 கோடியை தாண்டியது. பியர்ல்ஸ் குரூப் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின்படி, PACL நிறுவனம் 7 ஆண்டுகளில், இந்தியாவில் 3 கோடி ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக அறிவித்தது. வசூலித்த பணத்திற்கு சொத்து வாங்கி வைத்திருக்கிறார்கள். பின்னர் முதலீட்டாளர்களுக்கு பணம் தருவதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்ற உங்களின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. பின் என்ன தான் பிரச்சனை.. எங்கே சறுக்கியது
அதை அடுத்த வாரம் பார்ப்போம்…..