டெர்ம் இன்சூரன்ஸ் யாரெல்லாம் க்ளெய்ம் செய்ய முடியாது?
பாலிசிதாரர் கொலை செய்யப்பட்டால், அந்த வழக்கு முடியும் வரை இன்சூரன்ஸ் பணத்தை நிறுத்தி வைப்பார்கள். அதிலும் அந்த வழக்கின் சாதகமான தீர்ப்புகள் வந்தால் மட்டும் இன்சூரன்ஸ் பணத்தை க்ளைம் செய்து கொள்ள முடியும்.
அதே போல் பாலிசிதாரர் ஏதேனும் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்தால், வழக்கு முடிந்து அவருக்கு சாதமான தீர்ப்பு வந்தால் மட்டுமே பாலிசியை க்ளைம் செய்ய முடியும்.
பாலிசிதாரர் இறக்கும் போது குடிபோதையிலோ அல்லது வேறு ஏதேனும் போதை வஸ்துக்களை பயன்படுத்தி இருந்தாலோ க்ளைம் செய்ய முடியாது. அதாவது, மதுபோதையில் வண்டி ஒட்டிக் கொண்டு சென்று, விபத்தில் இறந்துவிட்டால், விபத்திற்கான காரணம் எதிர்தரப்பினராக இருந்தாலும், க்ளைம் செய்ய முடியாது.
காலம் பூராவும் கஷ்டப்பட்டு, குடும்பத்திற்கு உதவும் என்றும் போடும் இன்சூரன்ஸ் பாலிசிகளும், இப்படி ஒரு சில தவறுகளால் க்ளைம் செய்ய முடியாமல் போகும்.
நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், பாலிசி எடுக்கும் முன்னர் அதை தெரிவித்து விடுங்கள். ஏனெனில் புகைப்பிடிப்ப வர்களுக்கு கட்டாயம் பிரிமியம் அதிகமாக இருக்கும். ஒரு வேளை நீங்கள், பாலிசி எடுத்த பின்பு புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால், கட்டாயம் அதை தெரியப்படுத்துங்கள். ஏனெனில் உங்களின் மரணம் புகை பழக்கத்தால் ஏற்பட்டதாக இருந்தால், பாலிசியில் அதை க்ளைம் செய்ய முடியாமல் போய்விடும்.
சிலர் அபாயகரமான விளையாட்டுகள் மூலம் மரணிப்பார்கள். ஆனால் அவர்கள் எடுத்த இன்சூரன்ஸ் அதற்கெல்லாம் க்ளைம் ஆகாது. அதிலும் ஆகாயத்தில் பறப்பது, ஆகாயத்தில் வண்டி ஓட்டுவது, பாரா கிளைடிங், பாரா சூட்டிங் மற்றும் கார், இரண்டு சக்கர வாகன ரேஸ்கள் என சிலவற்றில் எதிர்பாராத விதமாக மரணித்தால் அதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது. இதற்கென பிரிமியம் அதிகம் கொண்ட பாலிசிகள் உண்டு.
பாலிசிதாரர் ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தாலே இன்சூரன்ஸ் தொகையை க்ளைம் செய்ய முடியாது. எனினும் தற்போது சில நிறுவனங்கள் பாலிசிதாரர், பாலிசி எடுத்து ஒரு வருடத்துக்குள் தற்கொலை மூலம் இறந்துவிட்டால் க்ளைம் செய்ய முடியாது என்றும், இதுவே, பாலிசி போடப்பட்டு இரண்டாவது வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் பாலிசியை க்ளைம் செய்து கொள்ள முடியும் என சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நிலநடுக்கம், சுனாமி, வெள்ளப் பெருக்கு, சூறாவளி போன்ற இயற்கை பேரிடரால் இறந்துவிட்டால் பாலிசிதாரர் க்ளைம் செய்ய முடியாது. எனவே, இன்சூரன்ஸ் போட்டால் மட்டும் போதாது. அதை க்ளைம் செய்யும் போதும் இது போன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.