பான் கார்டு எதற்கெல்லாம் தேவை?
வரி செலுத்துவோருக்கு தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து வழங்கப்படும். இதுவே பான் எண் எனப்படும்.
வருமான வரித் துறையுடனான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் கட்டாயமாகும். மேலும், வங்கிக் கணக்கு திறப்பது, வங்கியில் பணம் போடுவது, டீமேட் கணக்கு தொடங்குவது, அசையா சொத்துகளை வாங்குவது/விற்பது, செக்யூரிட்டிஸ் டீலிங் ஆகியவற்றுக்கு பான் எண் அவசியம்.
மேலும் ரூ.50,000த்திற்கு மேல் ஹோட்டல் அல்லது உணவகத்தில் பில் செலுத்துவது, வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடுவது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது, பங்குபத்திரம் வாங்குவது, வங்கியில் ரூ.50,000த்திற்கு மேல் பணம் போடுவது, ஆயுள் காப்பீடு பிரிமீயம் செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு கட்டாயம் தேவைப்படும்.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது பான் எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். வருமான வரி கணக்கில் மட்டுமல்லாமல், வரி கட்டணம் செலுத்தும் சீட்டிலும் பான் எண்ணை குறிப்பிட வேண்டும். ஆதார் கார்டுடன் பான் அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு இணைத்தவர்கள் பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.