அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம்
பதிவு செய்து பயன்பெறுங்கள்
கல்வி, திருமணம், மகப்பேறு, உயிரிழப்பு,
ஓய்வூதியம் என சலுகைகளை வாரிவழங்கும்
அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம்
பதிவு செய்து பயன்பெறுங்கள்
இந்தியாவில் நடைபெறும் பல்லாயிரம் கோடி வர்த்தகத்திற்கு பின்னால் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உடலுழைப்பு அடங்கியிருக்கிறது. அவர்களின் நலன்சார்ந்த சிந்தனைகள் என்னவோ சுதந்திரம் பெற்று 45 ஆண்டுகளுக்குப் பின்பே உதயமானது.
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களை தவிர்த்து கட்டுமானப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட அன்றாட பணி ஊதியம் பெறுவோர் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் நலன்களுக்கென உருவாக்கப்பட்டதே தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.
கட்டுமான தொழிலாளர்கள் நலனை பாதுகாத்திட கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க 1994-ம் ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டு, 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சோதனை முயற்சியாக கோவை, மதுரை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்காக மட்டும் செயல்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடக்க முயற்சியாக பணியின் போது இறக்கும் கட்டுமான தொழிலாளிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகை நிர்ணயிக் கப்பட்டது. பின்னர் கல்வி உதவித் தொகை வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு உடலுழைப்பு தொழிலாளர் நலச் சங்கம் தொடங்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைப்புசாரா தொழிலாளர் ஆணையம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நலவாரியம் முழுமையாக விரிவுபடுத்தப்பட்டு கட்டடம் கட்டுவோர், உடலுழைப்பு தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சலவைத் தொழிலில் ஈடுபடுவோர், முடிதிருத்துவோர், தையல் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள், பனை தொழிலில் ஈடுபடுவோர், பட்டு உற்பத்தி மற்றும் நெசவுத் தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழிலாளர்கள், ஓவியர்கள், பொற்கொல்லர், மண்பாண்ட தொழிலாளர்கள். வீட்டு பணியாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள், பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என 17 வகையான தொழில்களும் அது சார்ந்த உட்பிரிவுகளும் உள்ளடக்கிய தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான நலவாரியமாக தமிழக அரசால் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது தொழிலாளர் நலவாரியம். அத்துடன் தொழில்களின் உட்பிரிவுகளாக உள்ள 500க்கும் மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலன் அடையும் வகையில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
நல வாரியங்களின் பயன்கள் :-
நலவாரியங்களில் மூலம் கல்வி உதவித்தொகை, பெண்களுக்கு திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, பணியின் போது உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், பிற தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம்
-
- இயற்கை மரணத்தால் உயிர் இழக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.20,000 நிவாரணம், ஈமச்சடங்கு காரியங்களுக்கு ரூ.5,000 நிவாரணத் தொகை
- தொழிலாளர்கள் மூக்குக்கண்ணாடி வாங்கிட ரூ.500 உதவிதொகை வழங்கப்படுகிறது.
- முக்கிய அம்சமாக 60 வயதிற்கு மேற்பட்ட நலவாரிய உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- தொழிலாளர் பெண் குழந்தைகளின் திருமண செலவிற்கு ரூ.5,000, ஆண் குழந்தையாக இருப்பின் ரூ.3,000
- பதிவு செய்த பெண் பிரசவத்திற்கு ஏழு மாதம் முன்பு விண்ணப்பித்தால் ரூ.6,000, பிரசவம் முடிந்த பிறகு ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- பெண் குழந்தைகளுக்கு 10 மற்றும் 11-ம் வகுப்பிற்கு ரூ.1,000, 12-ம் வகுப்பிற்கு ரூ.1,500 உதவித் தொகையும், 10 மற்றும் 12ம் வகுப்பு தேறிய ஆண்களுக்கு முறையே ரூ.1,000, ரூ.1,500 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
- இதே போல் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,200, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,200, இளங்கலை படிப்பவர்களுக்கு ரூ.1,500, முதுகலை படிப்பவர்களுக்கு ரூ.1,500 ரூபாயும், பொறியியல் படிப்பவர்களுக்கு ரூ.6000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
- விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.
நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் அடையாள அட்டை தொழிலாளர் அடையாள அட்டையாக பயன்படுத்த உரிமை வழங்கப் பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகளுக்கு செலவிடப்படும் தொகையானது, கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய மும், ஓட்டுனர் நல வாரியமும் நேரடியாக நிதி திரட்டும் அமைப்பாகவும், பிற நல வாரியங்கள் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் வாயிலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் செலவிடப்படுகின்றன.
கட்டுமான பணியில், கட்டட உரிமையாளரிடமிருந்து பெறப்படும் வரியிலிருந்து நூற்றுக்கு 30 பைசா வீதம் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது. இப்படி வசூலிக்கப்பட்டு சேர்க்கப்பட்ட நிதி மட்டுமே 2019-ம் நிதி நிலையின்படி ரூ.4,000 கோடி கட்டுமான வாரியத்தில் இருப்புத் தொகை உள்ளது. இதே போல் ஓட்டுனர் நல வாரியமும் சாலை வரியிலிருந்து 1% ஓட்டுனர் நல வாரியத்திற்கு செல்கிறது.
இவ்வாரியத்திலும் பல கோடி நிதி இருப்பில் உள்ளது. தற்போது வாரியம் முழுமையாக இணைய வசதி கொண்டதாக தகவமைக்கப்பட்டு இருக்கிறது.
வீணாகும் நிதிகள் : ஒவ்வொரு ஆண்டும் நல வாரியத்தில் உள்ள நிதிகள் பெருமளவில் வீண்விரயம் செய்யப்படுகின்றன. கட்டுமான மற்றும் ஓட்டுனர் வாரியங்களில் உள்ள தொழிலாளர்களை தவிர மற்ற வாரிய தொழிலாளர்களுக்கு சரியாக நிவாரணம் வழங்கப்படுவது இல்லை.
ஓய்வூதியமும் ஆறு மாதம் ஒருமுறை மட்டுமே மற்ற வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சேகரிக்கப்படும் மற்றும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளை அரசு வேறு விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
கட்டுமான, ஓட்டுனர் நலவாரியம் போல் ஒவ்வொரு வாரியத்திற்கும் நேரடி நிதித் திரட்டு முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையும் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இதில் கவனம் செலுத்துமா..?
நலவாரியத்தில் பதிவு செய்வது எப்படி.?
நலவாரியத்தில் பதிவு செய்ய விரும்புவோர்க்கான வயது வரம்பு 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு என்று தனி அலுவலகங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அலுவலகத்தில் நேரடியாகவும் அல்லது www.tnuwwb.tn.gov.in என்ற இணைய முகவரி வழியாகவும் பதிவு செய்யலாம்.
தொழிலாளி, சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் / தொழிலாளர் உதவி ஆய்வாளர் / கிராம நிர்வாக அலுவலர் / சென்னை மாவட்டத்திற்கான வருவாய் ஆய்வாளர் / பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் / கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்கள் / கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வேலையளிப்பவர் உள்ளிட்ட நபரிடமிருந்து பெற்ற பணிச் சான்றிதழுடன் குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் முதல் பக்கம், ஆதார் அட்டை வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் ஆவணம் ஆகியவற்றுடன் விண்ணப்பப் பாரத்தை பூர்த்தி செய்து நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய கட்டணம் கிடையாது.
-இப்ராகீம்