வாய்ப்புகளைப் பயன்படுத்துங்க மக்களே….
வாய்ப்பு என்பதை நாமே கஷ்டப்பட்டு உருவாக்கி, அதன் பலனை அடைய வேண்டும் என்ற புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஓரளவுக்கே சரியான புரிதல் ஆகும். கஷ்டப்பட்டுக் கண்டறிந்து திறன் வளர்த்து வெற்றியை ருசிப்பது என்பதெல்லாம் சரிதான். இத்தகைய வெற்றியில் நமக்கு முழுமையான திருப்தியும், செயல்களில் முழுமையான கட்டுப்பாடும் நமக்கு இருக்கும்.
அதே சமயம், மற்றுமொரு வாய்ப்பும் நம்மை நோக்கி அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும். நீங்கள் பாட்டுக்கு செய்யும் விஷயங்களைச் செய்துகொண்டே இருப்பீர்கள். எங்கிருந்தோ ஒரு வாய்ப்பு உருவாகி (யாராலோ உருவாக்கப்பட்டு/பயன்படுத்தத் தெரியாமல்/வாய்ப்பாகவே அவரால் கருதப் படாமல்) அது உங்களை நோக்கி நகர்ந்து வந்து உங்கள் கதவைத் தட்டும்.
அந்த வாய்ப்பை உணர்ந்து அதில் தேவையான அளவு கவனம் செலுத்தி முழுவெற்றி பெறத் தேவையானவற்றைத் திட்டமிட்டு செய்யும் திறனை நீங்கள் வளர்த்துக்கொண்டீர்கள் எனில், உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும். அவற்றின் மூலம் நீங்கள் பெறும் அனுகூலங்கள் இரட்டிப்பாக இருக்கும்.
ஒன்று, நீங்களாக உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு; மற்றொன்று, உங்களை நோக்கி வருகிற வாய்ப்புகள் என உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் பன்மடங்காக உயரும்.
என்ன, யாரோ உருவாக்கிய வாய்ப்பை நாம் பயன்படுத்துவதா? நமக்கான வாய்ப்புகளை நாம்தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் உருவாக்கிய வாய்ப்பை உபயோகித்தால், நாம் சந்தர்ப்பவாதியாக ஆகி விடமட்டோமா என்பீர்கள்.
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும், வாய்ப்புகளைக் கண்டறிந்து உபயோகித்துக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டாம் வகையை இந்த உலகம் காலம் காலமாக கொஞ்சம் எதிர்மறையாகவே பார்க்கிறது என்றுகூடச் சொல்லலாம்.