இன்சூரன்ஸ் எடுத்த மக்களே.. இந்த விஷயம் தெரியுமா…?
பாலிசி டேர்ம், பிரீமியம் டேர்முக்கும் வித்தியாசம் அறிவோம். காப்பீட்டில் பாலிசி டேர்ம் (Policy Term) என்பது பாலிசி எத்தனை ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்பதைக் குறிக்கும்.
பிரீமியம் டேர்ம் (Premium Term) என்பது இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு எத்தனை ஆண்டுகள் பீரிமியம் கட்ட வேண்டும் என்பதைக் குறிக்கும். பொதுவாக, இந்த இரண்டும் ஒரே கால அளவாக இருக்கும். யூலிப் (யூனிட் லிங்டு பாலிசி) மற்றும் சிறப்பு வகை எண்டோமென்ட் பாலிசிகளில் பிரீமியம் கட்டும் காலம் குறைவாகவும் பாலிசி மூலம் கவரேஜ் கிடைக்கும் ஆண்டுகள் அதிகமாகவும் இருக்கும்.
உதாரணமாக, யூலிப் பாலிசி ஒன்றில் பாலிசி டேர்ம் 30 ஆண்டுகள். பிரீமியம் டேர்ம் 10 ஆண்டுகள் என இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த பாலிசியில் முதல் 10 ஆண்டுகள் மட்டும் பிரீமியம் கட்டி நிறுத்திவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிரீமியம் கட்டாமலே பாலிசியின் கவரேஜ் மற்றும் இதர அம்சங்கள் தொடரும். இதில் பீரிமியம் தொகை செலுத்தும் காலம் முடிந்த பிறகு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை உங்களின் ஆயுள் காப்பீட்டுக்காக பாலிசி காலம் முழுவதும் நீங்கள் செலுத்திய தொகையிலிருந்து யூனிட்டுகளை விற்பதன் மூலம் எடுத்துக்கொள்ளப்படும்.
எண்டோமென்ட் பாலிசி எனில், பாலிசியில் அதுவரைக்கும் சேர்ந்திருக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை ஆயுள் காப்பீடு கவரேஜுக்காகக் கழித்துக் கொள்ளப்படும். இதனால் பாலிசியின் இறுதியில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை குறைய வாய்ப்பு இருக்கிறது. யூலிப் பாலிசியைப் பொறுத்தவரை, பங்குச் சந்தையின் செயல்பாட்டை பொறுத்து இறுதியாகக் கிடைக்கும் முதிர்வு தொகை இருக்கும்.