மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடா? இந்த 5 விஷயத்தை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க…
NAV முக்கியம்
தற்போதுள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், குறைந்த NAV உள்ள நிறுவனத்தை தேர்வு செய்கிறார்கள். இங்குதான் நாம் தவறு செய்கிறோம்! எளிமையாகச் சொன்னால், NAV என்பது ஒரு நிறுவனத்தின் ஒரு யூனிட் விலையாகும். இது நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மற்றும் மொத்த நிலுவையில் உள்ள யூனிட்களைப் பொறுத்தது.
எடுத்துக்காட்டாக ரூ.20 மற்றும் ரூ.50 உள்ள இரண்டு ஃபண்டுகளில் தலா ரூ.10,000 முதலீடு செய்தால், முதல் நிறுவனத்தில் நீங்கள் 500 யூனிட்டும், இரண்டாவது நிறுவனத்தில் நீங்கள் 200 யூனிட்டும் பெறுவீர்கள். NAV எண்ணிக்கை வித்தியாசமாக இருந்தாலும் இரண்டின் மொத்த மதிப்பு ஒன்றுதான், அதாவது ரூ.10,000 என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, ஒரு ஃபண்டின் என்ஏவி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும், அந்த எண்ணிக்கை ஃபண்டின் நிலை அல்லது செயல்திறனுக்கான குறிகாட்டியாக இருக்காது. எனவே, அதிக அல்லது குறைந்த NAV நிதியின் செயல்திறன் அல்லது சாதனை பதிவை குறிக்கிறது என்ற கட்டுக்கதையை ஒதுக்கி வைத்து விடுங்கள்.
கடந்தகால செயல்திறன்
பெரும்பாலும், பல முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் கடந்தகால செயல்திறனை வைத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கின்றனர். இந்த கட்டுக்கதை தவறான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கு வழிநடத்துகிறது.
கடந்தகால செயல்திறன் எதிர்கால செயல்திறனின் குறிகாட்டியாகவோ அல்லது அதற்கு உத்தரவாதம் அளிக்கவோ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெவ்வேறு காலகட்டங்களில் கடந்த காலத்தில் நிதி எவ்வாறு செயல்பட்டது என்பதன் பிரதிபலிப்பு இது. ஒரு ஃபண்டை தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் இறுதி முடிவு, அதை பெஞ்ச்மார்க் குறியீடுகள் மற்றும் பியர் ஃபண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
டிவிடெண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் என்பது வருமானத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர், ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்போது வளர்ச்சிக்கு பதிலாக டிவிடெண்ட் அதிகம் கிடைக்கும் என தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
சில மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் கூட இந்த கட்டுக்கதையை நம்புகின்றனர். ஒரு முதலீட்டாளராக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அறிவிக்கப்பட்ட டிவிடெண்ட் ஃபண்டின் சொந்த AUM மூலம் செலுத்தப்படுகிறது, அதாவது இது முதலீட்டாளர்களின் சொந்தப் பணம்! அதனால்தான் ஒரு ஃபண்டின் என்ஏவியும், அறிவிப்புக்குப் பிறகு டிவிடெண்ட் தொகையால் குறைக்கப்படுகிறது.
SIPகளை நிறுத்தக்கூடாது
ஏற்ற இறக்கம் என்பது பங்குச் சந்தையில் கண்டிப்பாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சந்தை உயரும் போது பெரும்பாலான மக்கள் அதை விரும்புகிறார்கள். ஆனால் மறுபுறம், சந்தை வீழ்ச்சியடைந்தால் அவர்களின் போர்ட்ஃபோலியோ படுவீழ்ச்சி அடைவதை உணர்ந்து பீதி அடைகிறார்கள். சந்தை இறங்கும்போது உடன் வெளியேறிவிட வேண்டும் என்ற கட்டுக்கதையை பலர் நம்புகிறார்கள். பங்குச்சந்தை மோசமான நிலையில் இருந்தாலும் தங்கள் SIP-களை தொடர வேண்டும்.
ஃபண்டின் முதலீட்டு நோக்கங்கள்
மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் முதலீட்டு நோக்கங்கள், முதலீட்டு ஆணை மற்றும் சொத்து ஒதுக்கீடு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடுகின்றன. இது சந்தை கட்டுப்பாட்டாளர்களின் வழிகாட்டுதலின்படியும் உள்ளது. ஆனால் பல முதலீட்டாளர்கள் இந்த நிதியை பற்றிய இத்தகைய தகவல்கள் தங்களின் வணிகம் அல்ல என்று நம்புகிறார்கள். எனவே அவர்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. அங்குதான் அவர்கள் தவறு செய்கிறார்கள். ஒரு மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்கும் போது நிதி/திட்டத்தின் முதலீட்டு நோக்கங்கள் உங்கள் நிதி விவரத்துடன் சீரமைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து முதலீடு செய்யுங்கள்.