நிறுவன தலைமை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டிய சிறந்த தலைமை பண்பு
அடையாளம் காட்டும் குணங்கள்
மற்றவர்களைக் கவர்வது:
தலைவன் அழகாக இருப்பது ஆரம்ப ஈர்ப்புக்கு உதவும். உருவமோ, பேச்சோ, பாணியோ, செயல்பாடோ ஏதோ ஒன்று வித்தியாசமாக, பிறரைக் கவர்வதாக இருக்க வேண்டும். மற்றவர்களைக் கவரத் தவறியவர்கள் தலைவன் ஆனதாக சரித்திரம் இல்லை. தலைவன் என்பவன் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும். தன்பால் பிறரை திரும்ப வைக்க வேண்டும்.
மற்றவர்களைப் பங்கு பெறச் செய்வது:
சிலர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டும் தலைவர்களாக முடியாது. வேலை செய்வதற்கும், வேலை வாங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. வேலை வாங்குவதற்கு முன்பு அந்த வேலையை அவன் தெரிந்திருக்க வேண்டும். அல்லது வேலையின் தன்மையை அறிந்திருக்க வேண்டும். வேலை செய்யத் தெரிந்தவனே வேலை வாங்குவதற்கான முழுத் தகுதியையும் பெறுகிறான். அப்படிப்பட்டவனே தலைமை பதவிக்கு தகுதியானவனாகிறான்.
தொலைநோக்கு:
தலைவன் என்பவன் ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிகாட்டுவதோடு நில்லாமல், அப்பிரச்சனை குறித்த தொலைநோக்குப் பார்வை கொண்டவனாக இருக்க வேண்டும். ‘இப்பொழுது இது சரி. ஆனால் பின்பு, இன்னும் சில ஆண்டுகள் கழித்து” என்கிற கோணங்களில் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மற்றவர் தேவைகளைப் புரிந்து கொள்வது:
தன்னைச் சுற்றியுள்ள உலகம் எது? அது எப்படிப்பட்டது, அங்குள்ளவர்கள் யார்? அவர்களின் தேவை என்ன? என்பதை சரியாகச் புரிந்து சிந்திப்பவனே தலைமை பண்புக்கு தகுதி பெறுகிறான்.
சொல்வதைச் செய்யுங்கள்:
நீங்கள் உங்களின் முக்கிய கொள்கைகளாக, நம்பிக்கைகளாக எதைச் சொல்கிறீர்களோ அதை உங்களின் அன்றாட வாழ்க்கையிலும் செய்து காட்டுங்கள். வெறுமனே மற்றவர்களுக்காக மட்டும் பாடம் நடத்தாமல், சொல்வதை செயலிலும் காட்ட வேண்டும். அது உங்கள் வார்த்தை மீதான மதிப்பை உயர்த்தும்.
மற்றவர்களுக்கு வழி காட்டுவது:
ஒரு பிரச்னையை அடையாளம் காட்டுவது, எதிர்ப்பது ஒரு செயல். அடுத்து அதை முடிக்க, வெல்ல வழி காண வேண்டும். ஒரு தலைவனானவன் பிரச்சனைகளை அடையாளம் காட்டுவதோடு நில்லாமல் அவற்றை தீர்ப்பதற்கான பாதையை அவனே அமைத்துக் காட்ட வேண்டும். அதாவது பிரச்னையில் சிக்கித் தவித்து, என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது, ‘இதோ இப்படிச் செய்’ என்று வழி காட்டுபவனே தலைவன்.