இ.எம்.ஐ.யில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை..
டி.வி., ப்ரிட்ஜ், வாசிங் மிஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை முழுப் பணம் செலுத்தி வாஙக முடியாத நடுத்தர மக்களின் ஏக்கத்தை போக்குவது வங்கிகள் வழங்கும் இ.எம்.ஐ. திட்டங்களே.!
பொருட்கள் வாங்க ஆதார் அட்டை, வங்கி புத்தகத்தின் பக்க நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்கள் இருந்தால் போதும். சிலர் வங்கிக் காசோலை கேட்பார்கள். 0 சதவீத வட்டி என்ற பெயரில் வழங்கும் இந்த கடன்களுக்கு பிராஸசிங் கட்டணம், வட்டி என 2.5 சதவீதம் வரை மொத்த கடன் தொகையில் மாதா மாதம் வசூலிக்கப்படுகின்றன.
மாதாமாதம் 5ம் தேதி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தேவையான மாதாந்திர தவணை கட்டணத்தை எடுத்துக் கொள்வார்கள். கடன் தேதி 5ம் தேதியென்றால், 5ம் தேதி வங்கி நேரத்திற்குள் பணம் கட்டினால் போதும் என நினைத்துவிடாதீர்கள். கடன் நிறுவனங்களோ காலை வங்கி இயங்கத் தொடங்கியதும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, இல்லையென்றால் ரூ.350 முதல் ரூ.800 வரை தவணைத் தொகைக்கு ஏற்ப அபராதம் விதித்துவிடுகிறார்கள். இது தான் வங்கிக்கு பெரும் லாபத்தை பெற்றுத் தரும் வாய்ப்புகள்.
அன்றைய தேதியில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தது என ஆதாரம் காட்டினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தாமல், அதே வேளையில் உங்களிடம் தர்க்கம் செய்யாமல், தவணை இறுதியில் சரி செய்து கொள்ளலாம் என கூறி விடுவார்கள். நாமும் தவணை முடிந்த பின் என்.ஓ.சி. கேட்கும் நேரத்தில் தான், அபராதக் கட்டணம் பாக்கி இருக்கிறது என கூறுவார்கள். நீங்கள் அப்போது சொல்வதை வங்கி அதிகாரிகள் காதில் போட்டுக் கொள்வதே இல்லை.
“சரி.. முடிந்தால் வசூல் பண்ணிக்கோ..” என நாம் விட்டுவிடலாம். நுகர்வோர் நீதிமன்றத்திற்கும் செல்லலாம். என்றாலும் நீங்கள் பொருட்கள் வாங்கும் போது, அவர்கள் நீட்டும் ஆவணங்களை படிக்காமல் (படிக்கத் தருவதில்லை..!) கையெழுத்திட்டு விடுகிறோம். அது தான் அவர்களுக்கு பலம். நீங்கள் உங்கள் தவணையிலிருந்து வெளியேறி என்.ஓ.சி. பெறும் வரை உங்களது சிபில் ஸ்கோர் குறைந்து புதிய கடன் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை தடுத்து விடும்.
எனவே வங்கி சொல்லும் தேதிக்கு ஒரு தேதிக்கு முன்னதாக உங்களது இ.எம்.ஐ. தொகையை கட்டி விடுங்கள். அதுவே பிரச்சனை ஏதுமின்றி வீட்டு உபயோகப் பொருட்களை வங்கி கடனில் தொடர்ந்து வாங்கிட உதவியாக அமையும்.