10 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பஞ்சப்பூரில் புதிய வர்த்தக மையம்..!
திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில், கோவையை மாதிரியாகக் கொண்டு, புதிய தொழில் வர்த்தக மையம் அமையவுள்ளது. இதற்கான நிலத்தை திருச்சி மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து சிட்கோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. திருச்சி மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம் (டிடிட்சியா) இந்த வர்த்தக மையத்தை நிறுவி தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக சிட்கோ நிறுவனமும், டிடிட்சியாவும் இணைந்து கூட்டு முயற்சியாக ரூ.11 கோடியில் இந்த தொழில் வர்த்தக மையத்தை கட்டமைக்கிறது. இதில், ரூ.5 கோடியை அரசு வழங்குகிறது. மீதமுள்ள ரூ.6 கோடியை சிறு, குறு தொழில் முனைவோர் வழங்குகின்றனர்.
திருச்சி–&மதுரை சாலை மற்றும் திருச்சி-திண்டுக்கல் சாலை இணைப்பு வட்ட வடிவ சாலையில் 6 கி.மீ. தொலைவில் சுமார் 9.42 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு பெறப்பட்டு வர்த்தக மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வர்த்தக மையமானது மத்திய பேருந்து நிலையம், இரயில் நிலையத்திலிருந்து 9.5 கி.மீ. தொலைவிலும், விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. வர்த்தக மையம் அமைப்பதற்காக அரசுவழிகாட்டுதலின்படி அதன் துவக்கப் பணியாக SPV (SPECIAL PURPOSE VEHICLE) அமைத்து TRICHY TRADE CENTER PVT LTD என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் NODEL AGENT–ஆக நியமிக்கப்பட்டிருக்கும் SIDCO-வினால் வணிக வளாகத்திற்கான சுமார் 9.42 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ALLOTMENT ORDER கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக மையம் அமைக்கப்பட்டால் திருச்சி மாவட்டத்தில் உலகளாவிய தொழில் வர்த்தக கண்காட்சியை நடத்தும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தித்தர வசதியாக இருக்கும். தேசிய, மாநிலம் மற்றும் உலகளவிலான தொழில் கண்காட்சிகளையும் இங்கு நடத்தலாம். தொழில் மாநாடு, கருத்தரங்கு, பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்பக் கண்காட்சிகள், பயிலரங்குகள் நடத்தப்படும். உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வுகளை நடத்தி தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் உதவியாக இந்த வர்த்தக மையம் அமையும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோர்கள் 250 பேரை உறுப்பினராக சேர்த்து தயார் நிலையில் உள்ளது. விருப்பமுள்ளவர்களை இந்த குழுவில் இணைத்து டிடிட்சியாவின் பங்களிப்பாக ரூ.6 கோடியை வழங்கவும் தயாராகி வருகிறது. ஜூன் மாதத்திற்குள் குழு அமைக்கப்பட்டால் அதே மாத இறுதிக்குள் பூமி பூஜையை நடத்தி ஜூலையில் கட்டுமானத்தை தொடங்கவும் ஆயத்தமாகி வருகிறது.
இந்த திட்டத்தில் தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ள, வர்த்தக மையத்தில் இணைந்திட விளக்கங்களை பெற டிடிட்சியாவின் தலைவர் ஆர்.இளங்கோ (99429 84454), செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் (98430 55101), பொருளாளர் பி.ராஜப்பா (98424 52887), சேர்மன் என்.கனகசபாபதி (94431 42005) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.