மொத்த முதலீடும் பங்குசந்தையில்…. சரியா?
பொதுவாக, ஒருவர் அவரின் மொத்த முதலீட்டையும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் போடுவது பெரும் தவறாகும். ஒருவரின் வயதுக்கேற்ப, பங்குச் சந்தை சார்ந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.
அதாவது, ஒருவரின் வயதை 100-லிருந்து கழித்துவரும், எண்ணை சதவிகிதமாகக் கருதி, அவரின் மொத்த முதலீட்டுத் தொகையில், அந்தத் சதவிகிதத்தைத் தான் பங்கு சார்ந்த முதலீட்டில் போட வேண்டும். இங்கு பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடு என்பது நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைக் குறிக்கும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒருவரின் வயது 30 என்று வைத்துக்கொள்வோம்.
அவர் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் 100&30 = 70% முதலீடு செய்ய வேண்டும். பங்குகளில் பணத்தைப் போட அவர் விரும்பவில்லை எனில், ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துவிடலாம்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்கிற போது முதலீட்டுக் காலம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப லார்ஜ்கேப், மல்ட்டிகேப், ஃபிளெக்ஸிகேப், மிட்கேப், ஸ்மால்கேப் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்துவரலாம். மீதமுள்ளதை தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த ஃபண்டுகள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.