தங்க நகை வாங்கும்போது ரசீதில் இருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்
இந்தியாவில் தங்க நகை அல்லது நாணயம் என எது வாங்கினாலும் அதற்கு ஹால்மார்க் முத்திரை உள்ளதா? ரசீதில் அந்த நகை குறித்த விவரங்கள் அனைத்தும் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளதா? என சரியாகப் பார்த்து வாங்க வேண்டும். இல்லையென்றால் வாங்கிய நகையில் ஏதேனும் பிரச்சனை வரும்போது அது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
இந்தியத் தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) இணையதளத்தில், “சில்லறை விற்பனையாளர்/நகைக்கடைக்காரர்களிடம் இருந்து தங்க நகை வாங்கும் போது சரியான பில்களை கேட்டுப் பெறுவது அவசியம்.
நகை வாங்கும் ரசீதில் ஹால்மார்க் குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும். வாங்கிய நகை குறித்த விவரங்கள் விளக்கமாக இருக்க வேண்டும். சரியான எடை விவரம் இருக்க வேண்டும். தங்கத்தின் சுத்தம் குறித்த விவரம் இருக்க வேண்டும். ஹால்மார்க் தங்க நகை எனில் BIS அங்கீகாரம் பெற்ற A&H மையத்தில் தேவைப்படும் போது தங்கம் பரிசோதிப்பது குறித்த விவரங்கள் இருக்க வேண்டும்.
வாங்கிய தங்க நகையின் எண்ணிக்கை, எடை அளவு, எவ்வளவு சுத்தமான நகை (22 காரட்), தற்போதைய தங்கம் விலை, செய் கூலி, ஹால்மார்க் கட்டணம், ஜிஎஸ்டி மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை. தங்க நகையில் ரத்தின கற்கள் இருந்தால் அது குறித்த விவரங்களும் தனியாக வழங்க வேண்டும். அதிலும் கற்களின் விலை, எடை குறித்த விவரங்கள் இருக்க வேண்டும்.
வாங்கிய தங்கக் குறித்து வாடிக்கை யாளர்களுக்குச் சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள பிஐஎஸ் சான்று பெற்ற ஹால்மார்க் மையத்தில் பரிசோதனை செய்து பார்க்கலாம்.
அதற்கு 200 ரூபாய் சோதனை கட்டணமாகச் செலுத்த வேண்டும். சோதனையின் போது சரியான தரத்தில் தங்க நகை இல்லையென்றால் அந்த நகையின் மதிப்பில் 2 மடங்கை வாடிக்கையாளருக்குக் கடையின் உரிமையாளர் வழங்க வேண்டும்.