சாலை விதிகளை மீறினால்… அபராதத்துடன் கூடுதல் இன்சூரன்ஸ்..!
சாலை விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இன்சூரன்ஸ் துறை கட்டுப்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. அமைப்பு மோட்டார் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுவதற்கான ப்ரீமியத்தைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும் எனப் புதிய விதிமுறையை அமலாக்கம் செய்யப் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது பரிந்துரைக்கப்பட்டு உள்ள திட்டத்தின்படி இந்தக் கூடுதல் இன்சூரன்ஸ் ப்ரீமியம் வாகன உரிமையாளர் மீது மட்டும் அல்லாமல் 3-ம் தரப்பு வாகனங்களில் ஏற்படும் பாதிப்பிற்கும் பொருந்தும் என்பதால், கண்மூடித்தனமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு இனி வரும் காலத்தில் அதிக இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்தப் புதிய வரைமுறையின் கீழ் ஒவ்வொரு சாலை விதிமீறல்களுக்கும் தனித்தனி பாயின்ட்கள் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கினால் அபராதம் மட்டும் அல்லாமல் 100 புள்ளிகள் கொடுக்கப்படும், அதேபோல் தவறான இடத்தில் பார்கிங் செய்திருந்தால் 10 பாயின்ட் எனப் புள்ளிகளுக்கு ஏற்ப இன்சூரன்ஸ் ப்ரீமியம் உயர்த்தப்பட உள்ளது. மேலும் 20 புள்ளிகளுக்குக் கீழ் இருந்தால் எவ்விதமான கூடுதல் இன்சூரன்ஸ் ப்ரீமியமும் இல்லை, ஆனால் 21 பாயின்ட்கள் முதல் கூடுதல் இன்சூரன்ஸ் ப்ரீமியம் உண்டு.
இதன் வாயிலாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.100 முதல் ரூ.750 வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.300 முதல் ரூ.1,500 வரையில் கூடுதலாக இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்த வேண்டி வரும். இந்தக் கூடுதல் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகையை வாகனத்திற்கான இன்சூரன்ஸை புதுப்பிக்கும் போது செலுத்த வேண்டும். இதுவே புதிய வாகனத்தையோ அல்லது பழைய வாகனத்தையோ வாங்கும் போது புதுப்பிக்கப்படும் இன்சூரன்ஸ்க்கு கூடுதல் ப்ரீமியம் செலுத்தத் தேவையில்லை.
இத்திட்டத்தை ஐ.ஆர்.டி.ஏ.ஐ. பரிந்துரைத்துள்ளது மட்டும் அல்லாமல் சோதனை திட்டமாக இதை டெல்லி பகுதியில் அமலாக்கம் செய்து ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது. திட்டத்தின் சோதனை ஓட்டத்தின் போது ஏற்படும் நடைமுறை இடர்களைச் சரி செய்து, பின்னர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. இதன் பிறகு தான் நாடு முழுவதும் இது அமலாக்கம் செய்யப்பட உள்ளது.